இந்திய சினிமா தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம். ஒரு காலத்தில் 100 கோடி ரூபாய் வசூல் என்பதை பெரிய விஷயமாக கொண்டாடிக் கொண்டிருந்த திரையுலகம் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டது அமீர்கான் தான்.
அவரது தங்கல் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டு, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற மாபெரும் இலக்கையும் அடைந்தது. இதன்பிறகு ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னட மொழிகளிலும் வெளியான திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை குவித்தன.
உதாரணத்திற்கு நாம் பாகுபலி திரைப்படத்தைக் கூறலாம். ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ் நடித்திருந்த இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைத் தாண்டி ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றது. இந்தியா முழுவதும் பாகுபலி பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் திரைப்படம் சாதனை படைத்தது. ஆக்ஷன் கதைக்களத்தில் செண்டிமெண்ட் காட்சிகளையும் தூவி விட்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், திரையரங்குகளில் தூள் கிளப்பியது. குறிப்பாக இரண்டாம் பாகம், வசூலை வாரி குவித்தது. கன்னட திரை உலகில் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை படைத்து பெருமை சேர்த்தது.
இப்படியான சூழலில் தற்போது, மிக மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறது ராமாயணம் திரைப்படம். ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களை தழுவி இதற்கு முந்தைய காலத்தில் நிறைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இருக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மகாபாரதம் தயாராகிறது.
நித்தேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நவீத் மல்கோத்ரா தயாரிக்கிறார். இரண்டு பாகங்களையும் சேர்த்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.





