மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வரும் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அதற்கான இறுதி கட்டப் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழாவிற்கான பணிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடைசி நேரத்தில் அதனை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து லியோ படத்தில் இருந்து இரண்டாம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன், அடுத்த வாரத்தில் படத்திற்கான டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நடுவே விஜய் தனது அடுத்த படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கம் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜை வரும் நான்காம் தேதி தொடங்குகிறது. புதிய கீதைக்குப் பிறகு விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில், தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.
இதில் தந்தை விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் விஜயின் தோற்றத்தை புதிய பரிணாமத்தில் காட்ட, வெங்கட் பிரபு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜய் ஆகியோர் கலிபோர்னியா சென்று திரும்பினர். இந்த நிலையில் தற்போது தளபதி 68 திரைப்படத்திலிருந்து புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ரஜினிகாந்தின் நெற்றிக்கண் திரைப்படத்தின் ஒன்லைனை பிடித்து தான் வெங்கட் பிரபு கதை எழுதி இருக்கிறாராம். அந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் கலக்கியிருப்பார். அதுவும் தந்தையாக சக்கரவர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் வரும் ரஜினி, பார்த்த பெண்களை எல்லாம் விரும்பும் சபலக்காரராக நடித்து கலக்கியிருப்பார். அவரது ரோலை தான் இந்தப் படத்திலும் தந்தை விஜய்க்கு வெங்கட் பிரபு தர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு, தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





