இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மொத்தம் ரூ. 385 கோடி பட்ஜெட்டில் உருவான தி கோட் படம் 455 கோடி ரூபாய் வசூலித்ததாக ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமே சமீபத்தில் அறிவித்திருந்தது. தி கோட் படத்தில் அப்பா – மகன் என்ற இரட்டை வேடத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இதில் டீஏஜிங் முறையில், மகன் ஜீவன் கேரக்டரில் நடித்த விஜயை பல கெட்டப்களில் காட்டி வெங்கட் பிரபு ரசிகர்களை அசத்தியிருந்தார்.
மேலும் இந்த படத்தில் கேமியோ ரோலில் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன், மட்ட பாடல் காட்சியில் திரிஷா, ஏஐ தொழில்நுட்பத்தில் ஒரு நிமிட காட்சியில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் என பல சிறப்பு அம்சங்களை இந்த படத்தில் தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி தியேட்டர் ஷேர் என்ற சாதனையை தி கோட் படம் படைத்த நிலையில், நடிகர் விஜய், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதிக்கு கேக் ஊட்டும் காட்சி வீடியோவாக வந்தது. இந்த வீடியோ காட்சியில் நடிகர் விஜயும், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் இருந்த நிலையில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அங்கு இல்லாதது பலத்த சர்ச்சையை கிளப்பியது.
தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. படம் வெளியான ஓரிரு தினங்களில் இந்த படம், நடிகர் விஜயகாந்த் நடித்த ராஜதுரை என்ற படத்தின் ரீமேக் என்றும் விமர்சனம் கிளம்பியது. நடிகர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில், 1990களில் விஜயகாந்த் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்த ராஜதுரை படத்தை அப்பட்டமாக அப்படியே காப்பி அடித்து வெங்கட் பிரபு, தி கோட் படத்தை எடுத்திருக்கிறார் என்றும் விமர்சனம் கிளம்பி சர்ச்சை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு கூறுகையில், தி கோட் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு ராஜதுரை படம் குறித்து தெரிய வந்தது. உடனே நான் அந்த படத்தை பார்த்தேன். முன்னதாகவே எனக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் ராஜதுரை படத்தை நான் முன்னதாகவே பார்த்திருப்பேன். தி கோட் படத்தை இன்னும் பெட்டராக எடுத்திருக்கலாம். இதில் அப்பா மகன் கேரக்டர் என்பது ஒரு யுனிவர்சல் ஸ்க்ரிப்ட். சர்வதேச அளவில் பட படங்களை பார்த்துதான் தி கோட் படத்தை உருவாக்கினேன். ஆனால் ராஜதுரை படத்தை எப்படி மிஸ் செய்தேன், இது எனக்கு வருத்தம் தருகிறது என்று அதில் வெங்கட்பிரபு இந்த விமர்சனத்தை கலாய்த்துள்ளார்.





