புலி வருது புலி வருது கதையாக, கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் நாளை மறுதினம் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்கவும், கொண்டாடவும் விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
படத்தின் ரிலீஸ் நாள் நெருங்க நெருங்க படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா, வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி, நடிகர் வைபவ் உள்ளிட்ட பலரும் யூடியூப் சேனல்களில் தி கோட் படம் குறித்து அப்டேட்டுகளை அள்ளித் தந்து வருகின்றனர். படத்தின் நீளம் 3 மணி நேரமாக இருந்தாலும், படத்தின் 2ம் பாதி போவதே தெரியாது என்றும் கூறி வருகின்றனர்.
தி கோட் படத்தை பொருத்த வரை படத்திற்கு ஸ்பெஷல் அயிட்டங்களாக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார் வெங்கட்பிரபு. குறிப்பாக பெரிய நடிகர்களை, நடிகைகளை இந்த படத்தின் முக்கியமான கேரக்டர்களிலும், கேமியோ ரோல்களிலும் நடிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் நடித்திருப்பதே படத்துக்கு பெரிய அளவில் கவனத்தை பெற்றுத் தந்திருக்கிறது. தவிர, நடிகை திரிஷா விஜய்க்காக இந்த படத்தில் மட்ட பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸில் கேமியோ ரோலில் வருகிறார்.
தி கோட் படத்தை பொருத்த வரை சண்டைக் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டிருப்பதை படத்தின் டிரெய்லர் பார்த்த ரசிகர்களே ஒப்புக்கொண்டு விட்டனர். படத்தின் வேகமும், காட்சியமைப்பும் நிச்சயம் இது ஆங்கில பட தரத்தில் இருக்கும் என்று கூறினாலும் 3 நிமிட டிரெய்லரை வைத்து 3 மணி நேர படத்தை முன்பே தீர்மானிக்கவும் முடியாது.
நேர்காணல் ஒன்றில் பேசிய வெங்கட்பிரபு, தி கோட் படத்தை ஒரு ஆண்டுக்குள், 400 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்து முடித்திருக்கிறோம். எனக்கு இந்த விஷயத்தில் குருநாதரே இயக்குனர் ராஜமவுலிதான். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் எத்தனையோ கோடிகள் செலவாகும், எத்தனையோ ஆண்டுகள் ஆகும். ஆனால் நாங்கள் நம்ம பட்ஜெட்டில், ஒரு ஆண்டுக்குள் படத்தை முடித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.





