தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து ஆடுகளம் விசாரணை அசுரன் வடசென்னை விடுதலை விடுதலை 2 என பல வெற்றிப் படங்களை தொடர்ச்சியாக கொடுத்தவர். இப்போது நடிகர் சிம்பு நடிக்கும் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய படங்களில் விசாரணை ஆடுகளம் படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் வெற்றிமாறன் சொந்தமாக படங்களையும் தயாரித்தவர். இதில் மனுஷி மற்றும் பேட் கேர்ள் ஆகிய படங்களை தயாரித்த வகையில் அவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் இனி படங்களை தயாரிக்கப் போவதில்லை என்றும் சமீபத்தில் அறிவித்து விட்டார்.
காமெடி நடிகராக இருந்த நடிகர் சூரியை விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன்தான். விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கருடன் கொட்டுக்காளி மாமன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். இளைஞர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்து வருகிறது. அவர் நடத்திய மாநாடுகளிலும் மக்கள் சந்திப்பு கூட்டங்களிலும் மிகப்பெரிய கூட்டம் திரண்டது. அதே நேரத்தில் கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, மனுஷன் ஒரு சமூக அரசியல் மிருகம். நாம யாரு எங்கே இருக்கோம் என்ன சூழ்நிலையில் இருக்கிறோம், நாம என்ன செய்யணும் என்கிற விழிப்புணர்வோடு இருக்கிறது ரொம்ப முக்கியம். நாம யாரை பின் தொடர விரும்புகிறோம்? அவர்கள் சரியான நபரா, எதுக்கு அவங்களை பின் தொடர போகிறோம் என்று மாணவர்களுக்கு தெரிஞ்சி இருக்கணும்.
குறைந்தபட்சம் எது சரி எது தப்பு? எது செய்யணும் எது செய்யக்கூடாதுன்னு தெரிஞ்சு வச்சுக்கணும். அதுக்கு உங்களை சுத்தி நடக்கிற விஷயத்தை பாருங்க. இந்த சமூகம் இன்னைக்கு என்னவா இயங்கிட்டு இருக்கு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேசி இருக்கிறார். நடிகர் விஜய் குறித்து அவர் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.





