தமிழ் சினிமாவில் எப்போதுமே இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் தனி கவனம் பெறுகின்றன. ஏனெனில் கதையை மட்டுமே மையப்படுத்தி படைப்புகளை தரும் இயக்குனர்களில் ஒருவராக அவர் இருந்து வருகிறார். அதனால் அவரது படங்கள் யதார்த்தமாக இருக்கின்றன. அதே நேரத்தில் ரசிக்கவும் அதிக வாய்ப்பு தருகின்றன.
பொல்லாதவன் கமர்ஷியல் படமாக இருந்தாலும் அது ஒருவிதமான கதைக்களத்தில் ரசிகர்களை ரசிக்க வைத்தது. பிறகு ஆடுகளம் படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விசாரணை வடசென்னை அசுரன் விடுதலை விடுதலை 2 படங்களுக்கு பிறகு அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்க தயாராகி விட்டார் வெற்றிமாறன்.
நடிகர் சூர்யாவும் இயக்குனர் வெற்றிமாறனும் இணையும் வாடிவாசல் படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் இயக்குனர் அமீர் நடிக்கிறார். மஞ்சுவிரட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டையும் உள்ளூரில் நடக்கும் அரசியல் சம்பவங்களையும் மையப்படுத்திய கதைக்களத்தில்தான் வாடிவாசல் படம் உருவாகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே வாடிவாசல் படம் குறித்த ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய நிலையில், பின்பு அப்படியே அந்த பணிகள் தடைபட்டு போய்விட்டன. விடுதலை படப்பிடிப்பில் வெற்றிமாறனும் சூர்யா அப்போது பிஸியாக நடித்து வந்த சில படங்களிலும் கவனத்தை செலுத்தியதால் இந்த படம் எந்த நகர்வும் இல்லாமல் அப்படியே முடங்கிப் போனது.
வேட்டை கருப்பு படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் நடிக்கும் நடிகர் சூர்யா, அந்த படத்தை முடித்துவிட்டு நேரடியாக வாடிவாசல் படப்பிடிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் இந்த படம் 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படம் குறித்து கூறியதாவது, வாடிவாசல் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் எனது பங்களிப்பை செலுத்துவேன். அந்த வகையில் வாடிவாசல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனதற்கு நான் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





