நடிகர் சிலம்பரசன் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து நானும் ரவுடிதான் காத்துவாக்குல ரெண்டு காதல் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கினார். ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது அதில் நாயகியாக நடித்த நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகள் நெருக்கமாக காதலித்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்பதுதான் இப்போது அடையாளமாக உளளது.
இந்நிலையில் எல்ஐகே படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசியதாவது, ஒருநாள் பிரதீப் ரங்கநாதனுக்கு மெசேஜ் பண்ணி கதை சொல்லணும்னு சொன்னேன். அப்புறம் அவருக்கு நேரில் எல்ஐகே படத்தின் கதையை சொன்னேன். அவருக்கு இந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடித்திருந்தது.
ஆனால் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கிறதுல தாமதம் ஆகிட்டே இருந்தது. அதே சமயத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு பெரிய படத்தை டைரக்ட் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதுபோல நிறைய வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துச்சு. ஆனால் எனக்கு கொடுத்த வார்த்தைக்காகவும் எனக்காகவும் அவர் இந்த எல்ஐகே படத்துக்காக காத்திருந்தார். என்னுடைய கடினமான சூழல்களில் உடன் இருந்த பிரதீப்புக்கு நான் ரொம்பவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
நானும் ரவுடிதான் படத்தை பாண்டிச்சேரியில் எடுக்கணும் என்று நான் ஆசைப்பட்டேன். அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் போய் தங்கி கதையை ரெடி பண்றதுக்கு என்கிட்ட பெரிதாக காசு எதுவும் இல்லை. அந்த நேரத்துல அனிருத் கிட்ட போறேன்னு சொல்லிட்டு பாண்டிச்சேரிக்கு கிளம்பிட்டேன். அப்போ என்கிட்ட பஸ்ல போறதுக்கு 250 ரூபாய் பணம் மட்டும்தான் பாக்கெட்டில் இருந்தது.
நான் பஸ்சுல போயிட்டு இருக்கும்போது அனிருத் எனக்கு ஒரு மெசேஜ் பண்ணினார். அப்போ உங்க பேக்குல 50 ஆயிரம் ரூபாய் பணம் வச்சிருக்கேன்னு அதில் சொல்லியிருந்தார். அந்த நேரத்துல நான் அப்படியே கண் கலங்கிட்டேன் என்று விக்னேஷ் சிவன் அந்த விழாவில் உருக்கமாக பேசியிருக்கிறார்.





