ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது. இதில், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.
லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. முதல் பாகத்திற்கு ஏ ஆர் ரகுமானுக்கு செய்ய வைத்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் கமலின் கதாபாத்திரம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த பெரும்பாலான நட்சத்திரங்கள், இயக்குனர்கள் நெல்சன் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சங்கர், இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் வரும் ஒவ்வொரு காட்சியும் அனல் பறக்கும் என்று கூறியிருந்தார்.
நிகழ்ச்சியின் போது பேசிய இயக்குனர் நெல்சன் அரங்கத்தையே ஆரவாரம் ஆக்கினார். அவர் பேசியதாவது, ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் போது ரஜினி சார் எப்போதும் சங்கர் சாரை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவர் என்னை மறைமுகமாக சங்கரைப் போல் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னணியில் நானும் பணியாற்றுகிறேன்.
அப்போது கமல் சார் என்னிடம் நிறைய விஷயங்களை பேசுவார். ஒரு மூன்று நாட்கள் கழித்து, சார் நீங்கள் சொன்ன யாரையும் எனக்கு தெரியாது என்று கூறினேன். அதற்கு அவர் உங்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது என்று பதில் கூறினார். இங்கு கமல் சார், மாஸ்டர்களுக்கு எல்லாம் மாஸ்டர். அவரிடம் நான் திட்டு வாங்கியதை எனது நண்பர்களிடம் பெருமையாக கூறினேன் என்று பேசி அரங்கையே சிரிக்க வைத்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்தியன் 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதன் வெளியீட்டிற்காக நான் காத்திருந்தேன். கமல் சார் சேனாதிபதி தாத்தா வேடத்தில் இருக்கும் போது தான் விக்ரம் திரைப்படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது. வெறும் ஐந்தே நிமிடத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் கமல்ஹாசன். விக்ரம் திரைப்படம் தொடங்கிய மூன்றாவது நாளிலேயே, ஸ்கிரிப்டில் எழுத்துப் பிழைக்காக நான் கமல் சாரிடம் திட்டு வாங்கினேன் என்று கூறினார்.





