தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக முக்கியமான நடிகராக முன்னணி இடத்தில் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகராக மட்டுமின்றி சிறந்த மனிதராகவும் அவர் பல நல்ல விஷயங்களை செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். குறிப்பாக சினிமா துறையில் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்கு தனது படங்களை இயக்கவும், அவர்கள் இயக்கிய படங்களை தயாரிக்கவும் முன் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அந்த வகையில் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு விஜயகாந்த் ஒரு ஆபத்பாந்தவனாக இருந்தார்.
விஜயகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகளில் பெரிய நடிகர்கள் முதல் யூனிட்டில் பணி செய்யும் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்ற திட்டத்தை செயல்படுத்தினார். அதாவது தமிழ் சினிமா ஷூட்டிங்கில் பெரிய நடிகர்களுக்கு அறுசுவையான விருந்து, துணை நடிகர்களுக்கு வேறு விதமான உணவு, படப்பிடிப்பில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வேறு விதமான உணவு என்றுதான் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் விஜயகாந்த் தனது படப்பிடிப்பின் போது அனைவருக்கும் ஒரே விதமான உணவு, அதில் மதிய வேளை அசைவ உணவு என்று கொண்டு வந்தார். இதை கூடுதல் செலவாக தயாரிப்பாளர் நினைக்கும் பட்சத்தில், படப்பிடிப்பு முழுவதும் உணவுக்கான மொத்த செலவை தனது சம்பளத்திலிருந்து சில கோடி ரூபாய் வரை ஒதுக்கி தந்தவர் நடிகர் விஜயகாந்த்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இதே பாணியில்தான் தனது படப்பிடிப்பில் நடிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்த இருந்த உணவுப் பாகுபாட்டை தகர்த்தெறிந்து அனைவருக்கும் ஒரே விதமான உணவு படப்பிடிப்பு தளங்களில் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். எம் ஜி ஆரின் இந்த கொள்கையை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தியவர் நடிகர் விஜயகாந்த். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜித் போன்றவர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்தாண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். படத்தின் துவக்கத்தில் ஒரு காட்சியில் விஜயகாந்த் வருவது போல், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கி இருந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த காட்சி திருப்தி அளிக்காமல் பலத்த ஏமாற்றத்தை தந்தது.
இது குறித்து தி கோட் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி கூறுகையில், விஜயகாந்த் நடித்த அந்த காட்சி ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த காட்சி நினைத்தபடி சரியாக வரவில்லை. அவரது பழைய புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை பயன்படுத்தி தான் அந்த காட்சியை உருவாக்கினோம். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக அது சரியாக மேட்ச் ஆகவில்லை. அதனால் பலத்த ஏமாற்றத்தை தந்து விட்டது. அதேபோல் விஜய்க்கும் ஏஐ தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் சரியாக வரவில்லை என்று வெளிப்படையாக ஒளிப்பதிவாளர் சித்தார் நுனி கூறி இருக்கிறார்.





