தமிழ் சினிமாவில் நம்பர் 1 நிலையில் இருப்பவர் நடிகர் விஜய். அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் தாராளமாக முன்வருகிறார். அவரது அடுத்த படத்துக்கு 250 கோடி சம்பளம் என்றாலும், தர சம்மதிக்கின்றனர். அந்த அளவுக்கு பொன் முட்டையிடும் பறவையாக, விஜய் சினிமாவில் ரசிகர்களின் செல்வாக்குடன் இருந்து வருகிறார்.
ஆனால், சினிமாவில் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டிய சூழலில் நடிகர் விஜய், இனி சினிமா வேண்டாம், அரசியல்தான் என் இலக்கு என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கிய அவர், கோட் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் 18வது இந்திய நாடாளுமன்ற தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டு, நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 291 இடங்களும், ராகுல் காந்தி தலைமையிலான இண்டியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இந்த முறை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 என்ற நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூ., கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி என திமுக கூட்டணியில் அங்கம் வகித்த வேட்பாளர்கள், அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியிருக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான போர்க்களத்தில், திமுகவுக்கு மக்கள் பேராதரவை தந்து பெரிய வெற்றியை தந்திருக்கின்றனர் என்று கூறப்பட்டாலும் எதிர்கட்சியாக உள்ள அதிமுக, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் தேர்தலில் வெற்றி மாங்கனி பறிக்கும் பாமகவும் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் திமுக உச்சத்தில் இருக்கும் போது, 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளப் போகும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், முதல்வர் பதவியை அடைவது சாத்தியம்தானா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும், நடிகர் பவன் கல்யாண் ஆகியோருக்கு மட்டும் விஜய், தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக, காங்கிரஸ், பாஜக சார்ந்த யாருக்கும் வாழ்த்து தெரிவிக்காமல் கமுக்கமாக இருந்து வருகிறார்.





