மலையாளத்தில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் பிரித்திவிராஜ். இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முக்கிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவிற்கு நன்கு பரிச்சயமானவர் என்று கூறலாம். ஆனால் சமீப நாட்களாக அவர் நடிப்பில் தமிழ் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதேசமயம் தெலுங்கு சினிமா பிரித்திவிராஜிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடித்த சலார் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் வந்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியா லெவலில் பேசப்பட்டார் பிரிதிவிராஜ். தொடர்ந்து, ராஜமவுலி – மகேஷ் பாபு கைகோர்க்கும் திரைப்படத்திலும் பிரித்திவிராஜ் இணைந்திருக்கிறார்.
மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இயக்கத்திலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இவரது இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு மாஸ் ஹீரோவை வைத்து மாஸ் திரைப்படமாக அதனை எடுத்திருந்தார்.
அரசியல் பின்புலம் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மலையாளத் திரை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவாக அங்கு கமர்சியல் திரைப்படங்கள் வெளியாவது மிக மிகக் குறைவு. அப்படியே வெளிவந்தாலும் அது வெற்றி பெறுவதும் பெரிதாகவே பேசப்படும். இந்த பார்முலாவை தான் லூசிபர் திரைப்படம் அடித்து உடைத்தது.
தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தான், எம்புரான் படத்தை இயக்கியிருக்கிறார் பிரிதிவிராஜ். மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தில், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித், சுராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் 27 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் முன்பதிவில் மிகப்பெரிய சாதனை படைத்தது. லியோ திரைப்படத்தின் சாதனையை இது முந்தியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்பதிவில் மட்டும் எம்புரான் திரைப்படம், 58 கோடி ரூபாய் வசூல் ஈட்டி உள்ளதாம். இதற்கு முன்பு மலையாள திரை உலகில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை எம்புரான் படைத்திருப்பது பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.





