ஒரு காலத்தில் எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு அடுத்த போட்டியாளர்களாக தமிழ் சினிமாவில் இருந்தவர்கள் ரஜினிகாந்த் – கமல்ஹாசன்தான். ஆனால் அதுவும் 1990ம் ஆண்டுகளுக்கு பிறகு மாறிப் போனது. ஏனெனில் ரஜினிகாந்த் மசாலா படங்களில் நடித்து வசூலை அள்ளிக்கொண்டிருக்க கமல்ஹாசன் வித்யாசமான திரைக்களங்களில் தன் நடிப்பை திறமையை காட்டி ஜெயித்துக்கொண்டு இருந்தார்.
அதனால் கலைத்திறமைக்காக நடிகர் கமலும் வணிகரீதியான வெற்றிக்கான கமர்ஷியல் படங்களில் ரஜினியும் தமிழ் சினிமாவில் பயணித்தனர். இந்நிலையில்தான் விஜய் அஜீத்குமார் சூர்யா விக்ரம் சிம்பு தனுஷ் போன்றவர்கள் சினிமாவுக்குள் வந்தனர். இவர்கள் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடித்தனர். சியான் விக்ரம் மட்டும் கமல் போல புதிய முயற்சிகளில் நடிப்பில் பல பரிமாணம் காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதற்கிடையே ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக பெரிய போட்டியாளர்களாக நட்சத்திர நடிகர்கள் விஜய் அஜீத்குமார் மாறிவிட்டனர். இவர்களுக்கு இடையே கடும் போட்டி ஒரு காலகட்டத்தில் நிலவியது. பிறகு அதுவும் மாறிப்போய்விட்டது. இந்த சூழலில்தான் விஜய் நடித்த வாரிசு படம் வெளியான போது சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜயா என்ற பஞ்சாயத்து கிளம்பி தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது,
பிறகு ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை இன்னும் இந்த விவகாரத்தில் கொளுத்திப் போட்டது போல் ஆன நிலையில் ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே ஒரு மறைமுக போட்டி உருவாகி விட்டது. இதற்கு விஜயும் ரஜினியும் வெளிப்படையாக பேசி முற்றுப்புள்ளி வைத்த போதிலும் இரு தரப்பு ரசிகர்களிடம் இந்த போட்டி மனப்பான்மை இன்னும் மாறவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம், 26 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 12ம் தேதி ரஜினி பிறந்தநாளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் 3 நாட்களில் இந்த படம் ரூ. 10 கோடி வசூலை கடந்தது. தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்களிடம் அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருவதால் இன்னும் 100 தியேட்டர்களில் இந்த படம் அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் திரிஷா நடித்த கில்லி படம் கடந்த 2023ம் ஆண்டில் ரி ரிலீஸாகி 32 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. இப்போது ரஜினிக்கும் விஜய்க்கும் மறைமுகமான போட்டி நீடிப்பதால் கில்லி படத்தின் வசூலை படையப்பா முந்தி விடுமா, முறியடித்து ஜெயித்து விடுமா என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் அதிகரித்துள்ளது. இதுவரை 5 நாட்களில் படையப்பா படம் 14 கோடி ரூபாய்க்கு வசூலை கடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





