இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படமானது தற்போது இரண்டாவது வாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் ஹிட் அடித்துள்ள ஜெயிலர் படமானது மீண்டும் ரஜினியை அடுத்த ரவுண்டுக்கு கொண்டு சென்றுள்ளது என்று ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் புகழ் பாடி வருகின்றனர். ஏனெனில் “தர்பார்”, “அண்ணாத்த” என அடுத்தடுத்து தோல்வி படங்களை தந்த ரஜினி தற்போது தோல்வியிலிருந்து மீண்டு வந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக ரஜினி அடுத்தடுத்த படத்திற்கான வேலைகளில் மும்பரமாக ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்ட ரஜினி தற்போது இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார்.
இவ்வேளையில் ரஜினி தனது 170-வது படத்திற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரஜினியின் 170-ஆவது படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கவுள்ளார் என்ற தகவல் உறுதியாகி உள்ளார். இந்த படத்தின் பூஜையானது ஆகஸ்ட் 26-ஆம் தேதி சென்னை லீலா பேலஸில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டும் இன்றி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்கவுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் தேடல் நடைபெற்று வரும் வேளையில் ரஜினிகாந்த்திற்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விக்ரம், வேலைக்காரன், மாமன்னன் என நடிப்பில் அசத்தி தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ள பகத் பாசிலுக்கு தற்போது அடுத்தடுத்த தமிழ் படங்கள் கிடைத்து வருவதால் அவரின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே விக்ரம் படத்தில் கமலுடன் இணைந்து அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்திய பகத் பாசில் தற்போது ரஜினிகாந்த்துக்கு எதிராக வில்லனாக நடிக்க இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த படத்தின் பெயர் வேட்டையன் என்று வைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகிய வேளையில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





