தமிழ் சினிமாவில் நடப்பாண்டில் ஜனவரி துவங்கி ஆகஸ்ட் வரை 8 மாதங்கள் கடந்து விட்டன. இந்த 8 மாதங்களில் மொத்தம் 175 படங்கள் தியேட்டர்களில் நேரடியாக வெளியாகி உள்ளன. நடிகை நயன்தாரா, நடிகர்கள் மாதவன் சித்தார்த் நடித்த டெஸ்ட் என்ற ஒரே ஒரு படம் மட்டும்தான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.
மொத்தம் 175 படங்கள் தமிழில் வெளியான நிலையில் இதில் வெற்றியடைந்த படங்கள் எத்தனை என்றால் மொத்தம் 8 படங்கள்தான். ரஜினிகாந்த் நடித்த கூலி விஷால் நடித்த மதகஜ ராஜா அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் சசிக்குமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி மற்றும் டிராகன் மாமன் தலைவன் தலைவி ஆகிய படங்கள்தான் வெற்றிப் படங்கள்.
இதில் கூலி மற்றும் தலைவன் தலைவி படங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்த படங்களாகும். மற்ற 6 படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் டூரிஸ்ட் பேமிலி குடும்பஸ்தன் டிராகன் மாமன் ஆகிய 4 படங்கள் மட்டுமே உண்மையில் வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
குட் பேட் அக்லி படம் அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒரு படமாக மட்டுமே இருந்து அதிக வசூல் செய்தது. மதகஜ ராஜா படம் காமெடிக்காக ஓடியது என்றாலும் அதில் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி கவர்ச்சியான காட்சிகள் அதிகமாக இருந்தன. அதனால் உண்மையில் ஜெயித்த படங்கள் என்றால் மாமன் டூரிஸ்ட் பேமிலி டிராகன் மற்றும் குடும்பஸ்தன் ஆகிய படங்கள் மட்டும்தான்.
தமிழ் சினிமாவை பொருத்த வரை இதுவரை மொத்தம் 175 படங்கள் வெளியான நிலையில் அதில் 8 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாகவும் அதில் 4 படங்கள் மட்டுமே ரசிகர்களின் முழு ஆதரவை பெற்ற வெற்றிப் படங்களாகவும் உள்ள நிலையில் தமிழ் சினிமாவின் மிக மோசமான ஒரு போக்கையே இது வெளிப்படுத்துகிறது. இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு ஒரு வெற்றிப் படம் என்பது கூட எதிர்காலத்தில் கேள்விக்குறி ஆகி விடலாம்.
இந்த சூழலில் பெய்டு ரிவ்யூ என்ற பெயரில் காசு கொடுத்து படங்களை விமர்சனம் செய்து ஜெயிக்க வைப்பதும் படம் ரிலீஸான 2 நாட்களிலேயே சக்சஸ் மீட் நடத்தி ஏமாற்றுவதும் தமிழ் சினிமாவில் இப்போது அதிகரித்துள்ளது. ஹீரோக்கள் சம்பளத்தை குறி வைக்காமல் நல்ல படங்களை தர வேண்டும் என்ற எண்ணத்தில் குறிவைக்க வேண்டும். இயக்குனர்களும் ஹீரோக்களுக்காக படம் பண்ணாமல் ரசிகர்களுக்காக படம் செய்தால் தமிழ் சினிமா கொஞ்சமாவது உருப்படும்.





