சினிமா நடிகர்களை கூத்தாடிகள் என இழிவாக விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனால் ஒரு விதத்தில் அந்த வார்த்தை பிரயோகம் ஒரு காலகட்டத்தில் உண்மையாக தான் இருந்தது. ஏனெனில் தெருவில் நடக்கும் நாடகங்களில், கூத்துகளில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள் கூத்தாடிய பிறகுதான் சினிமாவில் நட்சத்திரங்களாக மாறினர்.
அதனால்தான் நடிகர் விஜய் கூட தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் கூத்தாடிகள் என்றால் கேவலமா, கூத்தாடிகள் எத்தனை விஷயங்களை இந்த சமுதாயத்துக்கு கூத்தாடுவது மூலமாக சொல்கிறார்கள் தெரியுமா என்று பட்டியலிட்டு ஆவேசமாக பேசினார்.
சினிமா நாடகங்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் கூத்துக்கள் நடந்தன. அதில் நடிப்பவர்களை கூத்தாடிகள் என்றுதான் பலரும் கூறினர். பேச்சுவழக்கிலேயே கூத்தாடி என்றும் கோமாளி என்றும் அரிதாரம் பூசிய அவதாரங்கள் என்றும் நடிகர்கள் நடிகைகள் கூறப்பட்டனர்.
ஆனால் இன்று திரை நட்சத்திரங்களுக்கு சினிமாவில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் வேற லெவலில் இருக்கிறது. கோடிக்கணக்கில் அவர்களது வருமானம் திகைப்படைய செய்கிறது. சாதாரண காமெடி நடிகர்கள் கூட கோடிக்கணக்கில் சம்பளத்தை அள்ளுகின்றனர். தெலுங்கில் காமெடி நடிகர் பிரம்மானந்தம் என்பவருக்கு ரூ. 400 கோடி சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ரஜினி விஜய் கமல் அஜீத்குமார் போன்ற நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 1990ம் ஆண்டுகளில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்புக்கு தமிழ்நாட்டில் கோவில் கட்டுவதாக பரவிய தகவல் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போதும் அப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெனாலி என்ற பகுதியை சேர்ந்த சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் தனது சொந்த ஊரில் தனது வீட்டுக்கு அருகில் நடிகை சமந்தா சிலை நிறுவப்பட்ட ஒரு கோவிலை கட்டி இருக்கிறார். கடந்த 2023ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் சமந்தாவின் பிறந்த நாள் அன்று திறக்கப்பட்டுள்ளது. இன்னும் இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களா, என பலரும் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.





