தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பு, ஹீரோயிசம், நடனம், பாட்டு, சென்டிமென்ட், இசை எவ்வளவு முக்கியமோ அதைப் போலவே, ரசிகர்களை சிரிக்க வைக்க காமெடி காட்சிகளும் மிக முக்கியம். அந்த காலத்தில் முழுநீள நகைச்சுவை திரைப்படம் என்று குறிப்பிட்டே படங்கள் வருவது உண்டு. ஹீரோவுக்கு உள்ள அதே இமேஜ் காமெடி நடிகர்களுக்கும் கிடைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் சந்திரபாபு, நாகேஷ், காகா ராதாகிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால், கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், கஞ்சா கருப்பு, சூரி, யோகிபாபு வரை பல காமெடி நடிகர்கள் ரசிகர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் சிரிக்க வைத்திருக்கின்றனர். குறிப்பாக காமெடி படங்கள் தருவதில் கே பாக்யராஜ், வி சேகர், விசு, எஸ்வி சேகர், பாண்டியராஜன் போன்ற இயக்குனர்கள் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
பாட்டி சொல்லைத் தட்டாதே, ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, இன்றுபோய் நாளை வா, இம்சை அரசன் 23ம் புலிகேசி என பல படங்கள் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே மையப்படுத்திய படங்களாகே இயக்கப்பட்டன. எந்த லாஜிக்கும் இல்லாமல் இந்த படங்களை சிரித்து மகிழ்ச்சியாக பார்க்க முடிந்தது.
கே பாக்யராஜ் போன்ற ரசனையான இயக்குனர்கள், படத்தின் கதை ஓட்டத்திலேயே காமெடியையும் கொண்டு வந்து விடுவர். அதனால் காமெடி கலந்த படமாகவும் இருக்கும். நல்ல கதையாகவும் படம் இருக்கும். ஆக, டூ இன் ஒன்னாக அவரது பல படங்கள் ரசிகர்கள் மிகவும் ரசிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மௌன கீதங்கள், சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள் படங்களை சொல்லலாம்.
கவுண்டமணி செந்தில் இருந்தாலே, அந்த படம் பார்க்க காமெடியாக இருக்கும் என அவர்களை போஸ்டரில் பார்த்துவிட்டு தியேட்டர்களுக்கு வந்த ரசிகர் கூட்டம் மிக அதிகம். அது பெரும்பாலும் வீண் போனதும் இல்லை. ஆனால் இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் காமெடிக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காமெடி காட்சிகளை திரையில் பார்ப்பதே பெரிய வறட்சியாக மாறிவிட்டது.
கவுண்டமணி செந்தில் முதுமை காரணமாக நடிப்பதில்லை. விவேக் மறைந்து விட்டார், சூரி, சந்தானம் போன்றவர்கள் ஹீரோக்களாக மாறி விட்டனர். இப்போது காமெடி நடிகராக வலம்வருவது யோகி பாபு மட்டுமே. அவரது வசனங்களும், முகபாவனைகளும் ரசிகர்களுக்கு சிரிப்பையே வரவழைப்பது இல்லை. கவுண்டமணி செந்திலுடன் ரசிகர்கள் வாய்விட்டு சிரித்த காலம் மறையேறி போய்விட்டதா என்ற அவல நிலைதான் இப்போது தமிழ் சினிமாவில் காமெடிக்கு இருக்கிறது.





