தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இசை ஆளுமையாக வலம் வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர். 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். இப்போது 82 வயதிலும் படங்களுக்கு பிஸியாக இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்தும் சாதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார். இசைஞானியாக இளையராஜா திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்திருக்கிறார். இதற்காக திரையுலகினர் பலரும் அவருக்கு சமீபத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இசைஞானி இளையராஜாவை பாராட்டும் விதமாகவும் அவரது 50 ஆண்டுகால இசை சாதனையை புகழும் விதமாகவும் அவரது பிறந்த நாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால் சில காரணங்களால் இந்த விழா தள்ளிப்போனது. எப்போது விழா நடக்கும் என்பதே ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படாததால் இளையராஜாவின் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் வருகிற 13ம் தேதி அதாவது வருகிற சனிக்கிழமை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து கொள்கின்றன.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரை உலகைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் பலர் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்திய அளவில் உள்ள பிரபலமான திரைக்கலைஞர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழி நடிகர் நடிகைகளும் இந்த விழாவில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
இதுவரை எந்த சினிமா நிகழ்ச்சியிலும் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்வாரா என்பது சஸ்பென்ஸ்தான். முதல்வர் ஸ்டாலின் வராவிட்டாலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விழாவில் தவெக தலைவர் நடிகர் விஜயும் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் திமுக அரசு நடத்தும் விழாவை அவர் புறக்கணிக்க அதிக வாய்ப்புள்ளது.





