நடப்பாண்டு தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் தக் லைப் திரைப்படமும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் மணிரத்னம் என இரண்டு மாபெரும் கலைஞர்கள் ஒன்று சேர்ந்ததுதான். இவர்கள் ஏற்கனவே இணைந்து கொடுத்த நாயகன் என்னும் திரைப்படத்தை தமிழ் சினிமா அவ்வளவு எளிதில் மறந்து விடாது.
காலங்கள் கடந்து பேசப்படும் அந்த காவியத்திற்கு காரணமான இருவரும் மீண்டும் கை கோர்த்ததால் பலரும், தக் லைப் திரைப்படத்தை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருந்தார்கள். கமல் மணிரத்னம் போக இதில் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்று இருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்தது.
இப்படியான சூழலில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இது விமர்சனத்தை பெறவில்லை. மாறாக படத்திற்கு எதிர் விமர்சனங்கள் கிளம்பின. வெறும் சாதாரண கதையைத்தான் மணிரத்னம் எடுத்து இருப்பதாகவும், அதிலும் இரண்டாம் பாதி சுத்தமாக எடுபடவில்லை என்றும் கூறினர்.
டெல்லியில் தாதாவாக இருக்கும் கமல்ஹாசனை, வளர்ப்பு மகன் சிம்பு உள்ளிட்ட பலர் சூழ்ச்சியால் கொலை முயற்சி செய்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்கும் கமல்ஹாசன் அவர்களை பழி வாங்குகிறார். இப்படி ஒரு சாதாரண கதையை வைத்துக் கொண்டுதான் இதன் திரைக்கதை எடுக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் படம் நன்றாக இருந்தாலும் போகப் போக அதற்கான தெளிவு கிடைக்காமல் போனதால் படம் விமர்சனங்களுக்கு ஆளானது.
இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த திரைப்படத்தை ஒரு படிக்கு மேலே சென்று கலாய்த்தார்கள் என்றே கூறலாம். படத்தின் ஒவ்வொரு காட்சியும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கி சித்தரிக்க ஆரம்பித்தனர். இது தக் லைப் படத்துக்கு மேலும் ஒரு பின்னடைவை கொடுத்தது. வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மற்றொரு தோல்வி படமாக கடந்து சென்றது.
இப்படியான சூழலில் படம் வெளியாகி 28 வது நாளிலேயே ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. திரையரங்குகளில் கடும் விமர்சனத்தை சம்பாதித்த இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் எப்படி பேசப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





