விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விசாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு துவங்கியிருக்கிறது. பல லட்சக்கணக்கான ரசிகர்கள், தவெக தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜய் மேடையில் இன்னும் சிறிது நேரத்தில் தோன்ற இருக்கிறார்.
திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டமும், கட்சி கொடி ஏந்திய தொண்டர்களின் ஆரவாரமும் அந்த பகுதியே திருவிழா கூட்டமாக பண்டிகை காலமாக மாறி இருக்கிறது. விஜய் மீது கொண்ட அபரிதமான அன்பின் காரணமாக இன்று காலை 6 மணி அளவில் மாநாடு பகுதியில் கட்சியினரும் தொண்டர்களும் ரசிகர்களும் கூட்டமாக திரண்ட நிலையில், மாநாடு களை கட்டி உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் புது அரசியல் பயணத்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளைய திலகம் நடிகர் பிரபு, நடிகர் விஜய்க்கு எப்போதும் எனது முழு ஆதரவுண்டு. எனது தந்தையின் ஆசீர்வாதமும் அவருக்கு நிறைய உண்டு. அவர் அரசியலில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியிருக்கிறார்.
மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி, விஜயின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு நடிகர் விஜய் சேதுபதி, தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க தவெக தலைவர் விஜய் சாருக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகள் என்று அவர் கூறியிருக்கிறார். அதேபோல் சமீபத்தில் தி கோட் படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்க்கு வாழ்த்துகளை சொல்லி இருக்கிறார்.
இயக்குனர் வெங்கட்பிரபு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், இந்த மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஒரு நேர்மறையான மாற்றத்திற்கு நீங்கள் வெளிச்சமாக இருக்கிறீர்கள் என்று அவர் கூறியிருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று தனது புதிய பயணத்தை தொடங்கி இருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.
மும்பையில் உள்ள நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில், வாழ்த்துகள் தளபதி விஜய் அண்ணா. சினிமாவில் காட்டிய அதே அர்ப்பணிப்பை அரசியலிலும் கொண்டு வாங்க. இந்த புது பயணம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறியிருக்கிறார். கங்குவா இசை வெளியீட்டு விழாவில் நேற்று பங்கேற்ற நடிகர் சூர்யாவும், விஜயின் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விஜய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.





