இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு, அஜர்பைஜானில் துவங்கியது. லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா, ஆரவ், அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆனால் 9 மாதங்களாகியும் இன்னும் இந்த படப்பிடிப்பு நிறைவடையவில்லை.
விடாமுயற்சி படப்பிடிப்பை துவங்கியது முதல், பல்வேறு விதமான இடையூறுகள் தொடர்ந்து ஏற்பட்டதால், படப்பிடிப்பு அடிக்கடி தடைபட்டது. குறிப்பாக அஜர்பைஜானில் கடும் குளிர், கனமழை, மணல் புயல் என அடிக்கடி ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் படப்பிடிப்பை சரிவர நடத்த முடியவில்லை.
அதுமட்டுமின்றி இதுபோன்ற பகுதிகளில் நாள் முழுவதும் வெயில் இருக்காது. குறிப்பிட்ட சில மணி நேரங்களில் மட்டுமே வெயில் நீடிக்கும். அதனால் இருட்டுவதற்குள் குறிப்பிட்ட வெளிப்புற படக்காட்சிகளை முடித்தாக வேண்டும். இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியிலும் 4 மாதங்கள் வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல், நான்கு மாதங்களுக்கு மேலாக விடாமுயற்சி படப்பிடிப்பே நடக்கவில்லை. ஒரே நேரத்தில் வேட்டையன், கேம் சேஞ்சர், இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் விடாமுயற்சி என படங்களை தயாரித்ததால், நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்பை லைகா புரடக்சன்ஸ் நிறுவனமும் நிறுத்தி கிடப்பில் போட்டுவிட்டது.
இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட்பேட் அக்லி படப்பிடிப்பிலும் அஜீத்குமார் கலந்துக்கொண்டு ஒரு ஷெட்யூலை முடித்துவிட்டார். அதன்பிறகு மீண்டும் 40 நாட்கள் வரை அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு கால்ஷீட் தந்துள்ளார். இதையடுத்து கடந்த 20ம் தேதி முதல் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வருகிறது.
விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது முதலே, அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன், கார் விபத்து காட்சி மட்டுமே வெளியிடப்பட்டது. தற்போது இன்று மாலை விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் அஜீத்குமார் ரோட்டில் கையில் பேக்குடன், கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்து நடந்து வரும் காட்சி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





