வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் தமிழ் சினிமாவில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. எனினும் இதில் சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று நல்ல வெற்றியை பெறுகின்றன. சில படங்கள் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு காணாமல் போய்விடுகின்றன. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 180க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் நிலையில் 15 முதல் 20 படங்கள் மட்டுமே பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்களாக உள்ளன.
இந்நிலையில் நாளை 18ம் தேதி 5 புதிய படங்கள் ரிலீஸாகின்றன. அறிமுக இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ள படம் சார். சாயா கண்ணன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கல்வியின் மகத்துவம், கல்வியின் தேவையை பற்றி கூறும் படமாக இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் சார் படத்தை வெளியிடுகிறது. ஏற்கனவே இந்த படத்தை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட சிலர் பலத்த பாராட்டு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட் மெட்டிஒலி சீரியலில் நடித்து பிறகு சினிமாவில் துணை நடிகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் டிரைவர் படத்தை ஸ்டோரீஸ் பை தி ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லத் தயாரித்துள்ளார். பேண்டஸி, டிராமா காமெடி என்டர்டைனராக கதையம்சம் கொண்ட படமாக இந்த படம் உருவாகி உள்ளது. நடிகை சுனைனா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அடுத்து இயக்குனர் ஆர். சிவா இயக்கிய படம் ஆலன். இந்த படத்தில் வெற்றி நாயகனாகவும், நாயகிகளாக ஜெர்மன் மதுரா மற்றும் அணு சித்தாரா நடித்திருக்கின்றனர். ஒரு எழுத்தாளரின் வாழ்க்கை தேடல் மற்றும் அழுத்தமான காதல் களத்தில் ஆலன் படம் உருவாகியுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரியமாலா என்ற படம் நாளை வெளியாகிறது. தெருக்கூத்து கலையை மையப்படுத்திய காதல் கதையை இந்த படம் கதைக்களமாக கொண்டிருக்கிறது. இந்த படம் 1980கள் காலகட்டத்தில் நடந் கதையை பின்னணியாக கொண்டிருக்கிறது. இந்த படத்தை வடலூர் சுதா ராஜலட்சுமி மற்றும் ஜேம்ஸ் யுவன் தயாரித்துள்ளனர். பீச்சாங்கை படத்தில் நடித்த ஆர்எஸ் கார்த்தி ஆரியமாலா படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
ஜேகே பிலிம்ஸ் புரடக்சன்ஸ் சார்பில் கே பிரதாப் என்பவர் நடித்து, அவரே தயாரித்துள்ள படம் கருப்பு பெட்டி. தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். குடும்பஸ்தனான கதாநாயகனுக்கு ஏற்படும் ஒரு சாதாரண பிரச்சனை அவரது குடும்பத்துக்குள் என்ன மாதிரியான பிரச்னைகளை கொண்டு வருகிறது என்பதை கதைக்களமாகக் கொண்டு கருப்பு பெட்டி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 5 படங்களும் நாளை வெளியாகிறது. லப்பர் பந்து, மெய்யழகன் போல இதில் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெருமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.





