கோவையை சேர்ந்தவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். கடந்த 1980 90களில் பல வெள்ளி விழா படங்களை தமிழ் சினிமாவில் தந்தவர். குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை அம்மன் கோவில் கிழக்காலே மெல்ல திறந்தது கதவு வைதேகி காத்திருந்தாள் ராஜாதி ராஜா போன்ற படங்களின் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் தான் என்பது பலருக்கும் தெரியாது.
ஆனால் சினிமாவில் ஒரு காலகட்டத்துக்கு பிறகு இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வந்து விட்டார். குறிப்பாக பல படங்களில் அப்பா அண்ணன் கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை ஆர் சுந்தர்ராஜன் பெற்றிருக்கிறார். இப்போது டிவி சீரியல்களிலும் ஆர் சுந்தர்ராஜன் நடித்து வருகிறார்.
காலம் மாறிப்போச்சு திருமதி பழனிசாமி தெற்கு தெரு மச்சான் அமைதிப்படை என பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஆர் சுந்தர்ராஜனும் கே பாக்யராஜூம் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். இருவரும் 1ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்த நண்பர்கள்.
அவர்கள் இருவரும்தான் சினிமாவில் டைரக்டர் ஆகும் ஆசையில் சென்னைக்கு வந்தனர். அப்போது இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கே பாக்யராஜ், தன்னை பிறகு கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டார். அதன்பிறகு எனக்கும் பாக்யராஜூக்கும் இடையில் இருந்த நட்பு காணாமல் போய்விட்டது என்று சமீபத்தில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
மேலும் மவுண்ட் ரோட்டில் ஒருமுறை பென்ஸ் காரில் இயக்குனர் கே பாக்யராஜ் சென்றதாகவும், அப்போது காரில் லிப்ட் கேட்ட ஆர் சுந்தர்ராஜனை அவர் காரில் ஏற்றிக்கொள்ள மறுத்த நிலையில் கல்லை எடுத்து அடிக்க போய்விட்டேன் என்றும் அந்த நேர்காணலின் போது ஆர் சுந்தர்ராஜன் வெளிப்படையாக கூறியிருந்ததும் இணையத்தில் வைரலானது.
சமீபத்தில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் கூறியதாவது, மௌன கீதங்கள் படம் வெளியான போது என் கையில் 2 ரூபாய் தான் இருந்துச்சு. நண்பனோட படத்தை பாக்கணும். ஆனால் படம் பார்த்தால் பட்டினி கிடக்கணும். என்ன பண்றதுன்னு தெரியலே. சரின்னு போய் தியேட்டர்ல படத்தை பார்த்தேன். படம் முடிஞ்சு எல்லாரும் எந்திரிச்சு போன பிறகும் சீட்டுல நான் மட்டும் உட்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ உண்மை தெரிஞ்சது. பாக்யராஜூக்கு படம் எடுக்க தெரியுது. அவன் இனி பொழச்சுக்குவான். ஆனால் இப்ப நான் என்ன பண்றது? எனக்கு கதை எழுத வர மாட்டேங்குது என்று மனசுக்குள் புலம்பியதாக ஆர் சுந்தர்ராஜன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





