மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும்; பணம் நிறை இருக்கும் மனிதர்களுக்கு கொடுக்கும் மனம் இருக்காது, கொடுக்கும் குணம் கொண்ட மனிதர்களுக்கு கையில் பணம் இருக்காது என்று பிறருக்கு உதவுவது குறித்து பழமொழிகள் சொல்வதுண்டு. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு உதவ மாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவ நினைப்பவர்கள் கையில் பணமே இருக்காது என்பதுதான் வாழ்க்கையின் நிதர்சனம்.
ஆனால் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் சினிமா நடிகர்களில் குறிப்பிட்ட சிலர் மக்களுக்கு உதவுவதில் ஆர்வமாக இருக்கின்றனர். உதாரணமாக வளர்ந்து வரும் நடிகரான கேபிஒய் பாலா, மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸ், மாற்றம் என்ற ஒரு சேவை அமைப்பை உருவாக்கி மக்களுக்கு சேவைகளை செய்து வருகிறார்.
இதுபோல் ஒரு சில நடிகர்கள் தங்களது உதவிகளை விளம்பரப்படுத்தாமல் தங்களால் இயன்ற வரையில், கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில நடிகர்கள், நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் அடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாத ஒரு மனநிலையில் இருக்கின்றனர்.
அவர்கள் பொதுவாக தனது படங்களை பார்க்க வரும் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு ஏற்படும் பொருளாதார ரீதியான சிக்கல்களில், நெருக்கடியில் கூட உதவ முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை. கனமழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் கூட முதல்வர் நிவாரண நிதிக்கு சில லட்சங்களை கண்துடைப்பாக கெ்ாடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்தவர் அக்சய் குமார். பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகரான இவர் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். 2.0 படத்தில் பறவைகளின் நேசிப்பாளராக நடித்திருந்த இவர், பறவைகளின் காதலராக பட்சி ராஜா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதாவது செல்போன் டவர்களால் பறவை இனங்கள் அழிவதை எதிர்க்கும் கேரக்டரில் வில்லனாக அக்சய்குமார் அந்தப் படத்தில் நடித்திருந்தார். மிகச் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் குரங்குகளுக்கு உணவளிக்கும் பணிகளை ஆஞ்சநேயர் சேவா என்ற அமைப்பு தொண்டர்களுடன் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இதுகுறித்து ஆஞ்சநேயா சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரியா குப்தா கூறுகையில், நடிகர் அக்சய் குமார் இரக்ககுணம் கொண்ட பண்புள்ள மனிதர். அவர் மிகுந்த பெருந்தன்மையோடு இந்த நன்கொடையை வழங்கியுள்ளார். நாங்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதோடு மட்டுமின்றி குரங்குகளால் மனிதர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.





