கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தொடர்ந்து அவரே இயக்கி கதாநாயகனாக நடித்த அவரது 2வது படம் லவ் டுடே படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இவானா நாயகியாகவும் சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.
இந்த 2 படங்களில் அமோக வெற்றிக்கு பிறகு ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும் வெளியாக மாபெரும் வெற்றியை கொடுத்தது. இப்படி அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து பிரதீப் ரங்கநாதன் நட்சத்திர நடிகராக மாறிவிட்டார்.
சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடிப்பில் வெளியான டியூட் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றிப் படமாகடே இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐகே படம் அடுத்த ஆண்டு 2026 பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவரே டைரக்ட் செய்து கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் பெரிய பட்ஜெட்டில் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாக உள்ளது. இதில் ஆக்சன் கலந்து அதிரடி படமாக தர பிரதீப் ரங்கநாதன் திட்டமிட்டுள்ளார்.
இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் 2026ம் ஆண்டில் மார்ச் மாதம் தொடங்கி 2026ம் ஆண்டிவ் இறுதிக்குள் படத்தை வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனாட்சி சவுத்ரி கமிட் செய்யப்பட்டுள்ளார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை மீனாட்சி ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்திலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தவர். லவ் டுடே படத்துக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை அவரே டைரக்ட் செய்து அவரே நாயகனாகவும் நடிக்கிறார் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.





