கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் தற்போது தங்கள் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ரஜினிகாந்திற்கு ஜெயிலர் திரைப்படமும், கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததே இதற்கு காரணம்.
ஜெயிலர் திரைப்படம் குவித்த பிரம்மாண்ட வசூலால் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் வேகம் காட்டி வரும் ரஜினிகாந்த், லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஜெய் பீம் ஞானவேல் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதுபோக லோகேஷ் கனகராஜின் திரைப்படமும் அவரது பட்டியலில் இருக்கிறது.
இந்தப் பக்கம் கமல்ஹாசன், விக்ரம் படத்தை முடித்த கையோடு தனது நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை அவர் தயாரிக்கிறார். இதே போல் தேசிங்கு பெரியசாமி – சிம்பு இணையும் படத்தையும் கமலே எடுக்கிறார்.
இதுபோக தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர், திரைப்படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தை தவிர, ஹெச் வினோத்துடன் ஒரு படம், மணிரத்னத்துடன் ஒரு படம் என இரண்டு படங்களில் அவர் கமிட் ஆகியுள்ளார். இதில் கமல்ஹாசன் கதை எழுத, வினோத் திரைக்கதை அமைக்கும் படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
ராணுவ பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில், கமலுக்கு மகனாக நடிக்க முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கு விஷால் மறுத்த நிலையில், ஆர்யா அல்லது சித்தார்த் ஆகிய இருவரில் ஒருவர் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க உள்ளாராம்.
ஏற்கனவே வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் ஹாரிஸ் தனது பின்னணி இசையின் மூலம் வெளுத்து வாங்கி இருப்பார். தற்போது பட வாய்ப்புகள் குறைவாக இருக்கும் அவருக்கு, கமல் – வினோத் படத்திற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தகவலை அறிந்த ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.





