கார்த்தி தற்போது சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதல் பாகத்தை எடுத்த பிஎஸ் மித்ரன் இதனை இயக்கியுள்ளார். இரண்டு கதாபாத்திரங்களில் கார்த்தி இதில் நடித்திருக்கும் நிலையில் அதில் தந்தை கதாபாத்திரத்திற்கு இரண்டாம் பாகத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார்.
வரும் தீபாவளி பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் வா வாத்தியாரே திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.
நலன் குமாரசாமி ஏற்கனவே சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். வெறும் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இங்கு இருக்கிறது. இப்படியான சூழலில் அவர் கார்த்தியுடன் இணைந்து இருப்பது, படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது கார்த்தி தனது 29 வது திரைப்படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். டாணாக்காரன் படத்தை எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் தமிழ்தான், இந்த திரைப்படத்திற்காக கார்த்தியுடன் பணிபுரிய இருக்கிறார். ராமேஸ்வரத்தை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படத்தை எடுக்க தமிழ் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
1960களில் காலகட்டங்களில் இதன் கதை நடைபெறுவது போன்று படமாக்கப்படுவதாக பேசிக் கொள்கிறார்கள். படத்திற்கு மார்சல் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. வைகைப்புயல் வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்படியான சூழலில் கார்த்தியின் 29ஆவது திரைப்படத்தில் கேமியோ ரோலில் தெலுங்கு நடிகர் நானி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நானியின் ஹிட் 3 படத்தில், கார்த்தி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்திருப்பார். அதனை தொடர்ந்து தற்போது கார்த்தி திரைப்படத்திலும் நானி நடிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





