தமிழ் சினிமாவில் பணிபுரியும் நடிகர் மற்றும் நடிகையரின் பாதுகாப்பு, தமிழ் சினிமா துறையின் வளர்ச்சி பணிகள் மற்றும் திரைத்துறை சார்ந்த பிரச்னைகளை தீர்ப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இப்போது இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி உள்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை பயன்படுத்தி 40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த சங்கத்தின் பணிசெய்த முன்னாள் மேனேஜர் உட்பட 3 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டைபோலீஸ் ஸ்டேஷனில் தென்னிந்திய நடிகர் சங்க மேனேஜர் தர்மராஜ் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது, நடிகர் சங்கத்தில் பணிசெய்த முன்னாள் மேனேஜர் பாலமுருகன் தூண்டுதலில் சங்க உறுப்பினர் சங்கர் பாபு மற்றும் முன்னாள் உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து எவர்கிரீன் மீடியா என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.
இது நடிகர் சங்கத்தின் ஒரு துணை அமைப்பு என பொதுவெளியில் சட்ட விரோதமாக விளம்பரம் செய்து வருகின்றனர். நடிகர் சங்கப் பெயரை பயன்படுத்தி அனைத்து உள்ளூர், தனியார், டிவி சேனல்களில் இருந்து விளம்பரங்கள் ஒளிபரப்புவதற்கான உரிமைகள் பெற்று அதன் வாயிலாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து எங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் விசாரணை செய்தோம்.
அப்போது சட்ட விரோதமான இந்த நடவடிக்கைகள் மூலம் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரையும் எங்களின் அலுவலக முகவரியையும் சங்க நிர்வாகிகள் பெயரையும் தவறாக பயன்படுத்தி சங்கத்தை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ள பாலமுருகன், சங்கர் பாபு சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து தேனம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடிகர் சங்க அலுவலக முகவரியையும் சங்க நிர்வாகிகள் பெயர்களையும் பயன்படுத்தியிருப்பதால் நடிகர் நடிகைகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க விரைவில் நடிகர் சங்க செயற்குழுவை கூட்டவும் நிர்வாகிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.





