தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக இருப்பவர் ஜீவி பிரகாஷ்குமார். இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இந்த படத்தில் இடம்பெற்ற வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி பாடலை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. இவர் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பரத், பாவனா, பசுபதி உள்ளிட்டோர் நடித்த வெயில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் பரத் விளம்பர கம்பெனி ஓனராக இருப்பார். பசுபதி அவரது அண்ணனாக, சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவிடுவார். பிறகு சினிமா தியேட்டரில் ஆபரேட்டராக இருப்பார். பாவனா பின்னணி குரல் டப்பிங் பேசுபவராக நடித்திருப்பார்.
வெயில் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி பிரகாஷ்குமார் பல படங்களுக்கு இசையமைத்தார். ஆயிரத்தில் ஒருவன்,. கிரீடம், பொல்லாதவன், அங்காடித்தெரு, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். மதராச பட்டணம், ஆடுகளம், எவனோ ஒருவன், குசேலன், காளை, அசுரன், சூரரைப் போற்று என பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர்.
இசையமைப்பாளராக மட்டுமின்றி, பல படங்களில் நாயகனாகவும் நடித்து அசத்திக்கொண்டு இருக்கிறார். குறிப்பாக ஜீவி பிரகாஷ்குமார் நடித்த டார்லிங், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, பென்சில், ஜெயில், நாச்சியார், குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை என பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் கூறியதாவது, காதல் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பதாக இருந்தது. அப்போது என்னிடம் பேசிய அந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், எப்படியாவது கஷ்டப்பட்டு மேலே வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நான், அப்படி எல்லாம் இல்லை சார் என்று ஓப்பனாக கூறினேன்.
அதனால் அதிருப்தியடைந்த அவர், காதல் படத்தில் என்னை இசையமைக்க கமிட் செய்யவில்லை. நான் உண்மையாக பேசியது ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை. பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நான் வெயில் படத்துக்கு இசையமைத்து படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. அப்போது வசந்தபாலனிடம், உண்மையிலேயே வெயில் படத்துக்கு ஜீவி பிரகாஷ்தான் இசையமைத்தானா, பக்கத்துல நீ இருந்து கண்ணால பார்த்தியா என்று பலமுறை சந்தேகமாக கேட்டிருக்கிறார். இதை வசந்தபாலன் சொன்ன போது எனக்கு சிரிப்பாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.





