கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. கவனமும் ஈர்த்தது. இந்த படத்துக்கு பிறகு லவ்டுடே என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், அவரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
லவ்டுடே படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த படம், வித்யாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது. இளம் வயதினர் மத்தியில் செல்போன் நட்புகளை விவரிக்கும் கதையாக இது இருந்தது. அதிலும் காதலன், காதலி மொபைல் போனை மாற்றிக்கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளை கொண்ட திரைக்கதையாக இருந்தது.
குறைந்த பட்ஜெட்டில் முடிக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிறமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அந்த மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் மூலம் மிகப் பிரபலமானார் பிரதீப் ரங்கநாதன்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக கமிட் ஆனார். தனது சம்பளம் ரூ. 20 கோடி எனக் கேட்டார். இதனால் அந்த படத்தை தயாரிப்பதாக இருந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகிக்கொண்டது. அதன்பிறகு அந்த படத்தை தயாரிக்க லியோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் செவன் ஸ்கரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் முன்வந்தார்.
எல்ஐசி என பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பெயரை வைத்தது, படத்தின் துவக்கத்திலேயே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஏற்கனவே மற்றொரு தயாரிப்பாளர் இதே பெயரை பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும் இதே பெயரில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
எனினும் சமீபமாக இந்த படத்தின் படப்பிடிப்பை அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஏனெனில் இந்த படத்தின் பிஸினஸ் கட் வீடியோவை, நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர். படத்தின் 25 முதல் 40 நிமிட காட்சிகளின் தொகுப்பை பார்த்த நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. ஆக இந்த படம் ரிலீஸானால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என தீர்மானித்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் படத்தையே டிராப் செய்துவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.





