மணிரத்னம் – கமல்ஹாசன் – சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் தக் லைப் திரைப்படம் வரும் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதலில் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி துல்கர் சல்மான் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் அவர்கள் திடீரென அதிலிருந்து விலகினர்.
இதன் பிறகுதான் சிலம்பரசன் ப்ராஜெக்ட்க்குள் வந்தார். அவரைத்தொடர்ந்து அசோக் செல்வன் இடம் பெற்றார். இவர்கள்போக நாசர் அபிராமி ஐஸ்வர்யா லட்சுமி ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். தக் லைப் திரைப்படத்தில், திரிஷா வருகிறார் என்பதும் சிம்புவும் திரிஷாவும்தான் ஜோடியாக வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் படத்தின் முன்னோட்டத்தில் காட்டியதே வேறு. அதாவது கமல்ஹாசன் உடன் தான் திரிஷாவிற்கு ஜோடியை வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இது போக கமல்ஹாசனின் மனைவியாகவும் அபிராமி நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்திலிருந்து வெளியான ஜிங்குச்சா பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதுபோக திரிஷா பாடியிருக்கும் சுகர் டாடி பாடலும் வெளியாகி உள்ளது. படத்தில் கமல்ஹாசனுக்கு வளர்ப்பு மகனாக சிம்பு வருகிறார். இருவருக்கும் இடையேயான மோதலைதான் காட்டி இருக்கிறார் மணிரத்னம். இது முன்னோட்டத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிவதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தக் லைப் உருவான கதை குறித்து கமல்ஹாசன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு நாள் மணிரத்னமுடன் சந்திப்பு நடந்தது. அவர் சயின்டிபிக் தொடர்பான ஒரு கதையை என்னிடம் கூறினார். நான் அப்போதுதான் கல்கி திரைப்படத்தை ஒத்துக் கொண்டிருந்தேன். இதனால் இந்த ஜானர் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டேன். இதன்பிறகு இரண்டு மூன்று ஜானர் குறித்து விவாதித்தோம்.
மணிரத்னம் தனக்கு ஒரு விஷயம் தெரியாது என்றால் உடனே சொல்லிவிடுவார். அப்போதும் அதுதான் நடந்தது. பிறகு நான் எழுதி வைத்திருந்த அமர்ஹே படக்கதையை கொடுத்தேன். நாயகனுடன் இது ஒரு சில விஷயங்களில் ஒத்துப் போகும் என்று தெரிவித்தேன். மறுநாளே அதற்கு மணிரத்னம் ஓகே சொல்லிவிட்டார். திரைக்கதையை தனக்கு ஏற்ப வடிவமைத்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். நாங்களும் பணியை தொடங்கி விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.





