தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் கவிஞர் இயக்குனர் பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் கங்கை அமரன். இப்போது திரைப்பட நடிகராகவும் மாறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கங்கை அமரன் தனது அண்ணன் இளையராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தையும் அதனால் உருவான ரஜினியின் பாடல் குறித்தும் ரசிகர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்
இப்போது லெனின் பாண்டியன் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் கங்கை அமரன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ரோஜாவும் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் முதலில் நடிக்க கமிட்டானது இயக்குனர் பாரதிராஜா தான். ஆனால் அவரது உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பாரதிராஜா நடிக்க வேண்டிய கேரக்டரில் இப்போது கங்கை அமரன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய கங்கை அமரன் கூறியதாவது, ஒருநாள் நான் இளையராஜா மற்றும் பாஸ்கர் மூவரும் சேர்ந்து ஸ்டுடியோ அறையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது ராஜா அண்ணன் இனிமேல் நாம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டார். அதற்கு நான் உடனே பதிலளித்து விட்டேன்.
நாம் சந்திக்கும் நேரம் இதுதான். அதனால்தான் இங்கு சாப்பிட வருகிறேன். இனிமேல் வரமாட்டேன் என்று கூறிவிட்டு கோபமாக சென்று விட்டேன்.யஇந்த சம்பவம் தனது மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதற்கு பிறகு தான் ஆண் என்ன பெண் என்ன என்ற பாடலை எழுதினேன் என்று அந்த நேர்காணலில் கங்கை அமரன் குறிப்பிட்டு கூறியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் கெளதமி நடித்த தர்மதுரை படத்தில் வரும் ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன எல்லா ஓர் இனம் தான். அட நாடென்ன காடென்ன வீடென்ன ஊரென்ன எல்லாம் ஓர் நிலம் தான். நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம் என்று அதில் இளையராஜாவை ஜாடை மாடையாக கங்கை அமரன் விமர்சித்திருப்பார்.
அந்த பாடலில் வரும் முதல் சரணத்தில், ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு கண்ணுக்குள்ள பேதம் இல்லே பார்ப்பதிலே ஏன் விரிவு பொன் பொருள் போகும் வரும் அன்பு மட்டும் போவதில்லை தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டு போவதில்லை என்றும் இளையராஜாவை அதில் அவர் விமர்சித்து இருப்பார். தன் அண்ணனை விமர்சித்து எழுதிய அந்த பாடலை அவரிடமே நேரடியாக கொடுத்ததாகவும் கங்கை அமரன் அதில் கூறியிருக்கிறார்.





