கன்னடம் மலையாளம் தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்தவர் கேத்தரின் தெரசா. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் கடந்த 2014ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து கலகலப்பு 2 கதகளி அருவம் கணிதன் கடம்பன் கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் கேத்தரின் தெரசா நாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் இந்த படம் ஓரளவு வெற்றி பெற்ற படங்களாக இருந்தாலும் கேத்தரின் தெரசா ஒரு முன்னணி நாயகியாக வெற்றி பெற முடியவில்லை.
அதே போல் தெலுங்கிலும் கேத்தரின் தெரசா சில படங்களில் நடித்த நிலையில் அவருக்கு ஒரு முன்னணி நடிகையாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் அவருக்கு ஜோடியாக கேங்கர்ஸ் படத்தில் கேத்தரின் தெரசா நடித்திருந்தார். ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருந்தார்.
படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்த கேத்தரின் தெரசா குத்தாட்டம் போட்டது சினிமா விமர்சகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியே அவசியம் இல்லாதது என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். இந்த படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் நடிகை வாணி போஜனின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கேத்தரின் தெரசா கூறியதாவது, நான் நடித்த படங்களில் ஒரு நடிகையாக என்னை மிகவும் குறைவாகவே பயன்படுத்தி இருக்கின்றனர் என்பதை போல நான் உணர்கிறேன். பல்வேறு மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நான் நடித்திருக்கிறேன்.
ஆனால் கவர்ச்சி நடிகை என்ற பிம்பத்தில்தான் நான் இன்னமும் சிக்கிக்கொண்டு இருக்கிறேன். அந்த பிம்பத்தை மறைக்க எனக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கிளாமரான கேரக்டர்களில் நடிப்பதை விட மற்ற நல்ல கதாபாத்திரங்களில் அதிகமான பங்களிப்பை என்னால் கொடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகை கேத்தரின் தெரசா வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.





