நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். காக்க காக்க, கஜினி, சிங்கம், ஏழாம் அறிவு, வேல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா, கடந்த சில ஆண்டுகளாக தந்த படங்கள் தோல்வியடைந்தன. குறிப்பாக எதற்கும் துணிந்தவன், என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் பலத்த ஏமாற்றம் தந்தன.
இந்நிலையில் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் சூர்யாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. ஆனால் அதன்பிறகு வந்த படங்கள் எதுவுமே அவருக்கு வெற்றிப் படங்களாகவும், ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாகவும் இருக்கவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையே சூர்யா இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் இருந்த சூர்யா பாதியில் வெளியேறினார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படமும் கைநழுவிப் போனது. இந்த 2 படங்களும் அவர் நடிக்காத நிலையில் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்தார். புறநானூறு படக் கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் உருவானது. இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. கங்குவா, வேட்டையன் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாகி களத்தில் மோதும் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.
ஆனால் கடைசியில் கங்குவா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். நடிகர் சூர்யா இதுகுறித்து மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, நடிகர் ரஜினிகாந்த் படம் அக்டோபர் 10ம் தேதி வெளிவருவதால், தமிழ் சினிமாவில் மூத்தவர் ரஜினிக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வோம். அவரது படம் ரிலீஸ் ஆவதால் கங்குவா ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுகிறது, என்று அறிவித்தார்.
கங்குவா 2 பாகங்களாக வெளிவர உள்ள நிலையில், முதல் பாகம்தான் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருந்தது. இப்போது அந்த நாளில் வேட்டையன் ரிலீஸ் ஆவதால், ரிலீஸ் தேதியை வருகிற நவம்பர் 14ம் தேதி திட்டமிட்டுள்ளனர். வருகிற நவம்பர் 14ம் தேதி கங்குவா ரிலீஸ் ஆகிறது. இதற்கான அறிவிப்பை விரைவில் கங்குவா படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.





