தமிழ் திரையிசையில் தேவாவின் இடம் தனித்துவமானது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் கோலோச்சியிருந்த காலகட்டத்தில் உள்ளே வந்த தேவா தனது தனித்துவமான இசையால் தனித்து ஜொலித்தார். அதன் காரணமாக அவர் தேனிசைத் தென்றல் தேவா என்றும் புகழப்பட்டார். குறிப்பாக தேவா ஃபீல்டுக்குள் வரும்வரை தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் அவ்வளவு பிரபலமாக இருந்ததில்லை.
அவர் வந்த பிறகு பட்டித்தொட்டியெங்கும் கானா பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் தேவாவுக்கு கானா பாடல்கள் மட்டும்தான் வரும் என பலர் கூற தனது மெலோடி பாடல்களால் அந்த விமர்சனத்தை அடித்து துவம்சம் செய்தார் தேவா. இன்றுவரை அவரது மெலோடி பாடல்களுக்கும் என்று 90ஸ் கிட்ஸ் ரசிகர்களாக இருக்கின்றனர்.
ரஜினிக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், இமான், அனிருத் என பல இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று வரும் இடத்துக்கு தேவா அமைத்த இசைதான் இன்றுவரை நிரந்தரமாக இருக்கிறது. ஏன் இப்போது வந்த அனிருத்கூட தேவா அமைத்த இசையைத்தான் ரீ மாடல் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த்துக்கு தேவா இசையமைத்த அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டடித்தவை. குறிப்பாக பாட்ஷாவில் ரஜினிக்கு தேவா போட்டிருந்த பிஜிஎம் இன்றுவரை கூஸ்பம்ப்ஸ் ரகம். அதேபோல் பாடல் விஷயத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் மிகச்சிறந்த இசையையே கொடுத்திருக்கிறார். அதிலும் பாட்ஷா படத்தின் ஓபனிங் பாடலான நான் ஆட்டோக்காரன் பாடலுக்கு தேவா முதலில் வேறு ட்யூனை போட ரஜினிகாந்த்தோ நான் கமல் ஹாசன் இல்லை எனக்கு தகுந்த மாதிரி மியூசிக் கொடுங்க என கேட்டுக்கொண்ட சம்பவம் எல்லாம் அரங்கேறியது.
இந்தச் சூழலில் அஜித் நடித்த ஆசை படத்துக்காக போட்ட ஒரு ட்யூனை பாட்ஷா படத்தில் தேவா பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது வசந்த்தும் தேவாவும் இணைந்து ஆசை, அப்பு உள்ளிட்ட க்ளாசிக் படங்களை கொடுத்தனர். அஜித் வாழ்விலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ஆசைதான். அந்தப் படத்துக்காக ஒரு ட்யூனை போட்டிருக்கிறார் தேவா.
ஆனால் இசை விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும் இயக்குநர் வசந்த் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை உடனடியாக ரிஜெக்ட் செய்துவிடுவார். அப்படி அந்த ட்யூன் அவருக்கு பிடிக்காமல் போக அதை ரிஜெக்ட் செய்துவிட்டார். அந்த ட்யூனை பாட்ஷா படத்தில் பயன்படுத்தினார் தேவா. பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி ரஜினிக்கு பெரும் அடையாளமாக மாறிப்போனது. அந்தப் பாடல்தான் ஸ்டைலு ஸ்டைலுதான் நீ சூப்பர் ஸ்டைலுதான் பாடல்.





