நடிகர் கஞ்சா கருப்பு, பிதாமகன் படத்தில் சில காட்சிகளில் தோன்றியிருப்பார். அதில் கஞ்சா விற்பவர்களில் ஒருவராக அவரை சித்திரித்திருப்பார் டைரக்டர் பாலா. ஒரு பாடல் காட்சியில் டேய் கஞ்சா கொடுக்கி, பாட்ட போடறா என நடிகை லைலா கோபமாக சொல்லியிருப்பார். அதில் இருந்து அவர் பெயர் கஞ்சா கருப்புதான்.
அடுத்து அமீர் இயக்கத்தில் ராம் படத்தில், ஆளவந்தான் கேரக்டரில் கஞ்சா கருப்பு நடிப்பு அதகளமாக இருக்கும். அதுவும் போலீஸ் விசாரணைக்காக ஸ்டேஷனுக்குள் இருக்கும் காட்சிகளில், ஏட்டய்யா ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க, வீடு வாசலுக்கு போறது இல்லையா என கேட்பார். அவரு குழாய்ல தண்ணீ வரலைன்னா கூட என்னைய அடிக்கறாருய்யா என ரகுமானிடம் புகார் சொல்வார்.
அடுத்து அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில், டக்ளஸ் கேரக்டரில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார் கஞ்சா கருப்பு. அதற்கு பின் ஹரி இயக்கிய தாமிரபரணி படத்திலும், சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305ல் கடவுள் படத்தில் சந்தானம், கஞ்சா கருப்பு இருவரும் இரட்டை நாயகர்களாகவும் நடித்தனர். இப்படி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்துக்கு வந்தார் கஞ்சா கருப்பு.
ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கும் சினிமா தயாரிக்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்தார். அந்த படம் சரியாக போகாமல் பிளாப் ஆனது. அதன்பிறகு நாடோடிகள், வேங்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்த கஞ்சா கருப்பு இப்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் நடிகர் வடிவேலு குறித்த விமர்சனத்தை முன்வைத்த நேர்காணல் வைரலானது. அதில் வடிவேலு சக நடிகர்களுக்கு பத்து காசு கூட செலவு பண்ண மாட்டார். யாரையாவது பார்க்க அவர்களது வீட்டுக்கு காரில் சென்றால், திரும்ப புறப்படும்போது காருக்கு பெட்ரோல் போடணும் என அவர்களிடம் ரூ. 1500 வாங்கி விடுவார் என்று கூறியிருந்தார்.
இப்போது திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடிகர் கஞ்சா கருப்பு அக்னிச்சட்டி ஏந்தி வலம் வந்துள்ளார். பக்தர்களுடன் பக்தராக அவர் அக்னிச்சட்டி ஏந்தி வந்த காட்சிகள் வைலராகி வருகிறது. எதற்காக இந்த அக்னிச்சட்டி வேண்டுதல் என கேட்ட போது, இந்த தேர்தல் அதிமுக வெற்றி பெற வேண்டும். அதற்காக தான் இந்த வேண்டுதலை நிறைவு செய்தேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறியிருக்கிறார்.





