நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார்.
வழக்கமான கதை திரைக்கதை என்ற பார்மூலாவில் இந்த படம் இல்லாமல் நடிகர் அஜீத்குமார் நடித்த பழைய படங்கள் தீனா வரலாறு அமர்க்களம் வாலி மற்றும் சிட்டிசன் பில்லா போன்ற படங்களின் ரெபரென்ஸ் ஆக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
அதனால் ஒரு மாபெரும் அஜீத்குமார் ரசிகர், அவரது ரசிகர்களை மட்டுமே சந்தோஷப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கிய ஒரு படமாக மட்டுமே குட் பேட் அக்லி படம் இருக்கிறது. காட்சிக்கு காட்சி அஜீத்குமாரின் புகழை பாடும் பெருமை பேசும் ஒரு படமாக குட் பேட் அக்லி படம் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த படத்தில் பிரபு பிரசன்னா சுனில் அர்ஜூன் தாஸ் பிரியா வாரியர் மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேலும் இளையராஜா இசையில் ஹிட் பாடல்களான ஒத்த ரூவா தாரேன் இளமை இதோ இதோ என் ஜோடி மஞ்சக்குருவி போன்ற பாடல்களும் படத்தில் இடம்பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
முதல் நாளில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் 30.9 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே 2ம் நாளில் 90 கோடி ரூபாயாக 2 மடங்கு அதிகரித்தது. பிறகு 3 நாட்களில் ரூ. 120 கோடி 4 நாட்களில் ரூ. 150 கோடி 5 நாட்களில் ரூ. 180 கோடி என கணிசமாக படத்தின் வசூல் எகிறிய நிலையில் இப்போது 12 நாட்களில் படத்தின் மொத்த வசூல் உச்சம் தொட்டிருக்கிறது.
அதாவது குட் பேட் அக்லி படம் ரிலீஸான 12 நாட்களில் இதுவரை 244 கோடி ரூபாய் என்ற வசூலை கடந்திருக்கிறது. இன்னும் பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 123 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் ரூ. 250 கோடி வசூலை குட் பேட் அக்லி கடக்கும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





