தமிழ் சினிமாவில் அரைத்த மாவையே அரைத்த கதையாக பல படங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றன. பல ஆண்டுகளாக இதே நிலைதான் தமிழ் சினிமாவில் தொடர்கிறது. இப்படி பழைய படங்களின் கதைகளை சுட்டு படம் எடுப்பதில் சில தமிழ் இயக்குநர்கள் பெயர் பெற்றவர்கள்.
முதலில் எல்லாம் 30 ஆண்டுகளுக்கு முந்தைய படங்களில் இருந்துதான் கதையை, காட்சியை உருவி, புதிய படத்தில் சேர்ப்பதுதான் வழக்கமாக இருந்தது. இப்போதெல்லாம், சில மாதங்களுக்கு முன், சில ஆண்டுகளுக்கு முன் வந்த அண்மைக்கால படங்களில் இருந்தே, கதைக் கருவை சுட்டி கொஞ்சம் உல்டா பண்ணி தந்து விடுகின்றனர்.
சுந்தர் சி, தனது காமெடி படங்களுக்கான கதையை, பழைய காமெடி கதைகளில் இருந்தே சுடுவது வழக்கம். அதே போல், இப்போது இயக்குநர் அட்லீ, அதில் பெரிய வித்தகராக இருக்கிறார். ஜவான் படத்தின் கதை 23 படங்களில் இருந்து சுடப்பட்டது என, பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டாலும், படம் 1,150 கோடி ரூபாயை வசூலில் தாண்டி விட்டது.
இவர்கள் மட்டுமின்றி, பல இயக்குநர்களின் படங்களை நன்றாக உற்றுகவனித்தால் பல படங்களின் கதைகள், முந்தைய படங்களில் இருந்த கதைகளாகவே பெரும்பாலும் இருக்கும். புதிது புதிதாக கதைகள் உருவாக்குவதில் இயக்குநர்களுக்கும், கதை ஆசிரியர்களுக்கும் ஆர்வம் இல்லை. ஏனெனில், புத்தகங்கள் வாசித்தால் மட்டுமே புதிய புதிய கதைகள் உருவாகும் என நடிகர் குரு சோமசுந்தரம் சமீபத்தில் கூறியிருந்தார்.
கதைக்கு பஞ்சம் போல, தமிழ் சினிமாவில் பட டைட்டில்களும் பெரும் பஞ்சம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் ரஜினி, விஜய் போன்றவர்கள் நடிக்கும் படங்களுக்கு, படத்தில் வரும் அவர்களது பெயரை டைட்டிலாக வைக்கப்படுகிறது. கமல் படத்துக்கும் அதே நிலைதான்.
ஜப்பான் படத்தை தொடர்ந்து, கார்த்தி நடிக்கும் 26வது படம் நலன்குமாரசாமி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில், நடிகர் ராஜ்கிரண் எம்ஜிஆர் ரசிகராக நடிக்கிறார். இந்த படத்துக்கு வா வா என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது வா வாத்தியாரே என்பதன் சுருக்கம்தான் வா வா. பல ஆண்டுகளுக்கு முன் வா அருகில் வா என்ற திகில் படம் வந்தது. அதுபோல இருப்பதாக பலரும் கிண்டலாக கூறுகின்றனர். எம்ஜிஆர் ரசிகர் என்றால் எத்தனையோ நல்ல பெயர்களை யோசித்து வைக்கலாமே, அவர் நடித்த படங்களின் பெயர்களுக்கா பஞ்சம் என்கின்றனர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள்.





