நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய நட்சத்திர நடிகராக இருக்கிறார். கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த துணிவு படம் 2023ம் ஆண்டில் ஜனவரி மாதம் தை பொங்கலுக்கு வெளியானது. 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் அஜீத் நடித்த ஒரு படம் கூட இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.
அதே நேரத்தில் துணிவு படம் வெளியான போது, விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. ஆனால் இந்த 2 ஆண்டுகளில் விஜய் நடித்த 2 படங்கள் ரிலீஸ் ஆகின. கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபரில் லியோ படமும், 2024ம் ஆண்டில் செப்டம்பரில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படமும் வெளியாகி சக்கைப் போடு போட்டது. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் விரக்தியடைந்தனர்.
இந்த சூழலில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் விடாமுயற்சி படம் 20 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்த நிலையில், இதோ அதோ என ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஆனால் ஒரு வழியாக கடந்த நவம்பர் மாத இறுதியில், பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் என டீசர் வெளியிட்டு அறிவித்தனர்.
இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 2 ஆண்டுகள் கழித்து வந்தாலும் பொங்கலுக்கு வருகிறது. இந்த தை பொங்கல் தல பொங்கலாக கொண்டாடலாம் என ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த லைகா நிறுவனம், பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் இல்லை, வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்து பலத்த ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்தது.
இப்போது வரை விடாமுயற்சி படம் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. ஜனவரி 23 என்று சொல்லப்பட்டாலும், அந்த நாளில் படம் வருமா, அல்லது டிரெய்லர் வருமா என்பது படக்குழுவினருக்கே தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால் இந்த சூழலில் அஜீத்குமார் ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரு லேட்டஸ்ட் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அஜீத்குமார் திரிஷா நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் பிரபுவின் மருமகன் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதும், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏப்ரல் 10ம் தேதி குட்பேட் அக்லி ரிலீஸ் உறுதியாகி விட்டது ஏகே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





