நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்கு பிறகு இப்போது நடித்து வரும் அவரது 170வது படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் 4 மாதங்களாக நடந்து வருகிறது, திருவனந்தபுரம், நாகர்கோவிலில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து கன்யாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
அதன்பிறகு இப்போது ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினியுடன் இந்த படத்தில், கேமியோ ரோலில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். பகத் பாசில், ரஜினிக்கு மகனாக நடித்துள்ளார். ராணா டகுபதி வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். மஞ்சுவாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இன்னும் 15 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற தீபாவளி பண்டிகைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏனெனில் போஸ்ட் புரடக்சன் பணிகள், சில மாதங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
வேட்டையன் படம் குறித்த சில முக்கிய தகவல்கள் லேட்டஸ்ட்டாக இப்போது தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில்தான் உறுதியாக நடிக்கிறார். ஆனால் பல காட்சிகளில் போலீஸ் டிரஸ் யூனிபார்மில் இல்லாமல், கேஷூவல் டிரஸ்சில் காணப்படுவது போல எடுத்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே ரஜினி போலீஸ் டிரஸ் கெட்டப்பில் நடித்த தர்பார் படம் பிளாப் ஆகி விட்டது. அதுமட்டுமின்றி நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரி ஜெயிலர் கெட்டப்பில் இருந்தார். அதனால் தொடர்ந்து போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
இந்த படத்தின் மையக்கரு என்னவெனில் போலீஸ் செய்யும் என்கவுண்டர் பற்றியதுதான். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், அதிகளவில் என்கவுண்டர்கள் நடத்தப்பட்டது. இதற்காக 1980-90களின் கதைக்களம் உருவாக்கப்பட்டு, அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படமாக இது உள்ளது. 15 இடங்களில் இதற்கான 1980-90 காலகட்டத்தை கொண்டுவரும் செட்டுகள் அமைக்கப்பட்டு, படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. ஜெய்பீம் படத்தில் லாக்கப் கொலை பற்றிய படம் எடுத்த டைரக்டர் தசெ ஞானவேல், இந்தமுறை போலீஸ் என்கவுண்டர் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





