தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் ஒன்று வாடிவாசல். அசுரன் திரைப்படத்தை வெற்றிமாறன் முடித்த பிறகு, வாடிவாசல் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கலைப்புலி எஸ் தாணு இதனை தயாரிக்கிறார். சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் திரைப்படத்தின் நாவலை தான் வெற்றிமாறன் படமாக்க இருக்கிறார்.
ஆனால் இதன் படப்பிடிப்பு தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. சூர்யாவும் வேறு ஒரு படத்தில் பிசியானதால், வெற்றிமாறன் அந்த சிறிய இடைவேளையில் விடுதலை படத்தை எடுக்கச் சென்றார். ஆனால் அதுவே தற்போது இரண்டு பாகமாக வளர்ந்து விட்டது.
தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் வெற்றிமாறன் கவனம் செலுத்தி வருகிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது. அனேகமாக, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு அவர் வாடிவாசல் படத்தை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் அண்மையில் இயக்குனர் அமீருக்கும், சூர்யா குடும்பத்தினருக்கும் இடையே பருத்திவீரன் தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரான, ஞானவேல் ராஜா, ஒரு பேட்டியில் அமீரை கடுமையாக சாடி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமீர், இயக்குனர்கள் சமுத்திரக்கனி சசிகுமார் ஆகியோர் கருத்து பதிவிட்டனர்.
பருத்திவீரன் படம் எடுக்கும்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி குறித்தும் அவர்கள் பேசினர். இந்த படம் குறித்து சம்பந்தப்பட்ட நாயகன் கார்த்தி, மற்றும் சூர்யா குடும்பத்தினர் தரப்பிலிருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் வெளியாகவில்லை. அதேசமயம் வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் இடம் பெற்றிருப்பதால், சூர்யா அதில் நடிக்க தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வாடிவாசல் குறித்து முக்கியமான தகவலை அமீர் பகிர்ந்து உள்ளார். அதில், வெற்றிமாறன் என்னிடம் படம் குறித்து அடிக்கடி அப்டேட்டுகளை கூறிக் கொண்டே இருப்பார். படத்தில் வரும் புதிய கதாபாத்திரம் பாடல் பதிவு இதைப்பற்றி பேசுவார். ஒரு நாள் திடீரென என்னிடம், வாடிவாசல் படத்திற்கான சூட்டிங்கிற்க்கு நாம் செல்லப் போவதில்லை என்று கூறினார். ஆனால் இப்போது நான்கு நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்த அவர், நான் மீண்டும் அந்த திரைப்படத்தை தொடங்க போகிறோம் என்று தெரிவித்தார். நான் அதற்கு அவரிடம் அப்படியா சந்தோசம் என்று தெரிவித்தேன் இவ்வாறாக அமீர் பேசியுள்ளார்.





