நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டில் ஜனவரி, 14ல் பொங்கல் பண்டிகையன்று வெளியானது. அதன்பிறகு 2023ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜானில் அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. மகிழ் திருமேனி படத்தை டைரக்ட் செய்தார்.
சரியாக ஓராண்டு கழிந்த நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இன்னும் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட வேண்டி உள்ளது. ஸ்பெயின் நாட்டில் குட்பேட் அக்லி படப்பிடிப்பில் இருக்கும் அஜீத்குமார், திரிஷாவை வைத்து 10 நாட்களில் இந்த பாடல் காட்சியை முடித்துவிட மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளார்.
ஆனால் இன்னும் விடாமுயற்சி படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கி, பல மாதங்களுக்கு பிறகு ஷூட்டிங் துவங்கிய குட்பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பின், அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அஜீத்குமார் வழங்கினார். குட் பேட் அக்லி என்று மாஸ் டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதமே துவங்கி விட்டது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் திரிஷா தான் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் பட்ஜெட் 360 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் அஜீத்குமாரின் சம்பளம் மட்டுமே ரூ.163 கோடியாக உள்ளது. 110 நாட்கள் மொத்தமாக ஷூட்டிங் நடத்தப்படுகிறது. இதில் ஸ்பெயின் நாட்டில் மட்டுமே 50 நாட்கள் வரை ஷூட்டிங் நடக்கிறது. இந்த படத்தில் சுமன், பிரசன்னா முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம், தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில், குட்பேட் அக்லி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜீத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. மேலும் இந்த படம் 2025 பொங்கல் ரிலீஸ் என்றும் அதில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விடாமுயற்சிக்கு முன்பே குட்பேட் அக்லி திரைக்கு வர உள்ளதால், ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





