கடந்த ஆண்டில் எஸ் ஜே சூர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் மார்க் ஆண்டனி. 100 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். தொடர்ந்து அவருக்கு நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு அமைந்தது.
தற்போது அவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தை குட் பேட் அக்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார், நடிகை திரிஷா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சென்னை மற்றும் ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் தற்போது ஷூட்டிங் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழாவில் கூட அவர் படத்தில் நடித்த விஷாலுக்கும், எஸ் ஜே சூர்யாவிற்கும் நன்றி சொல்லாமல் மார்க் ஆண்டனி படத்தை நடிகர் அஜீத்குமாருக்கு சமர்ப்பணம் செய்வதாக பேசியிருந்தார்.
அந்த அளவுக்கு நடிகர் அஜீத்குமார் மீது அளவு கடந்த பற்றும், மரியாதையும் கொண்டு இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அதனால் அஜித்குமார் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தவுடன் இந்த படத்தை மிகச் சிறப்பான படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ஆதிக் ரவிச்சந்திரன் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
தற்போது ஸ்பெயின் நாட்டில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று திடீரென இந்த படத்தில் இருந்து அஜீத் குமார், திரிஷா நடித்த சில காட்சிகளின் புகைப்படங்களும், சில கிளிப்பிங்ஸ் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. படப்பிடிப்பு தளத்தில் இருந்த யூனிட்டைச் சார்ந்த யாரோ சிலர், இப்படி நடிகர் அஜித்குமார் திரிஷா மற்றும் படப்பிடிப்பு காட்சிகளை வீடியோ எடுத்து வெளியிட்டது, சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதையறிந்த டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன், பலத்த அப்செட் ஆனார். தொடர்ந்து 4 மணி நேரம் படப்பிடிப்பை நிறுத்தி வைத்த அவர், படக் குழுவினரை அழைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியமானது. இந்த படம் என்னுடைய கனவு படம், லட்சிய படம். இப்படி ஷூட்டிங் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டால் படம் குறித்த ஆர்வமும் சஸ்பென்ஸ்சும் ரசிகர்கள் மத்தியில் இருக்காது. அதனால் படத்துக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. தயவு செய்து யாரும் இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.




