நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அவரது 50வது படம் ராயன். ஆக்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருந்தாலும் பல காட்சிகளில் அமைதியாகவும், இறுக்கமாகவும், அதே நேரத்தில் பக்குவப்பட்ட ஒரு நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துவிட்டார் ராயனாக நடித்த தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடி இல்லை. அதே நேரத்தில் தங்கை மீது அதீத பாசம் கொண்டவராகவும், இரண்டு தம்பிகளை வளர்த்து ஆளாக்கும் ஒரு பொறுப்புள்ள மூத்த அண்ணனாகனும் தனுஷ் வாழ்ந்திருக்கிறார். மேலும் பாஸ்ட் புட் கடை நடத்தும் அவர், தம்பிகளுக்கு பெரிய ஆபத்து வரும்போது களத்தில் இறங்கி விளையாடுகிறார். பல பேரை தயக்கமே இன்றி கொன்று குவிக்கிறார்.
அவரது தங்கையாக துஷாரா விஜயன், நடிப்பில் தனுஷூக்கு இணையாக நடித்துள்ளார். தன் அண்ணனுக்கு ஆபத்து வரும்போது சீறும் புலியாக மாறி, அவரும் மற்றவர்களை தாக்குகிறார். தன் அண்ணன் தனுஷை கொல்ல முயன்ற மற்ற 2 அண்ணன்களை பழி வாங்க துடிக்கிறார். இறுதியில் ஒரு அண்ணனை அவரே குத்தியும் கொன்று விடுகிறார். அவரது நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக மாறியது.
ராயன் படத்தை பொருத்த வரை செல்வராகவன் கேரக்டர் ரசிகர்களிடம் மனதை விட்டு என்றுமே அகலாது. என்னை இப்படி கொல்ற உன்னை ராயன் என்னவெல்லாம் செய்வான்னு நினைக்கும்போது எனக்கு சிரிப்புதான் வருது என்று வில்லன் எஸ்ஜே சூர்யாவிடம் பேசும் காட்சியில் அவரது கேரக்டரை நிரூபித்து விடுகிறார்.
இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் குறைந்த நாட்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படம் ராயன்தான். அத்துடன் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூலை கடந்தததும் ராயன் படம்தான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தனுஷ் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் ராயன் படம் ஓடிடி ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ராயன் படம் வெளியாகிறது. அதே நேரத்தில் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சன் நெக்ஸ்ட் செயலியிலும் இந்த படத்தை ரசிகர்கள் காணலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.





