மலையாள சினிமாவில் இருந்து பல சிறந்த நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கின்றனர். அந்த வகையில் அம்பிகா, ராதா, ரேவதி, நதியா, கீர்த்தி சுரேஷ், நித்யாமேனன் வரை பல நடிகைகளை குறிப்பிட்டு சொல்லலாம். இவர்கள் எல்லாமே மலையாள வரவுகள்தான். நடிகைகள் மட்டும் இன்றி மலையாள நடிகர்களும் தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்கள் மனங்களை வென்றிருக்கின்றனர்.
குறிப்பாக மம்முட்டி மோகன்லால் சுரேஷ்கோபி சமீபத்தில் பிருத்வி ராஜ், நிவின் பாலி, பகத் பாசில் உள்ளிட்ட சிலரை குறிப்பிட்டு சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது துல்கர் சல்மான், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு மலையாள நடிகராக இருக்கிறார். ஓ காதல் கண்மணி நடிகையர் திலகம், சீதாராமம் உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மான் ஏற்கனவே நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நடித்துவரும் பான் இந்தியா ஸ்டார் நடிகராக துல்கர் சல்மான் தற்போது நடிப்புத் துறையில் இருந்து வருகிறார். துல்கர் சல்மான் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் உருவான படம் லக்கி பாஸ்கர். தீபாவளி அன்று இந்த படம் திரைக்கு வந்தது.
இந்த படத்தை தனுஷ் நடித்து வெளியான வாத்தி என்ற படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி என்பவர்தான் இயக்கியுள்ளார். ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையை ஏற்று வாழும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் துல்கர் சல்மான். தெலுங்கில் உருவான இந்த படம் தெலுங்கு படத்துக்குரிய மசாலா தனங்கள் இல்லாமல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் லக்கி பாஸ்கர் படம் 150 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், பிரிமியர் ஷோ பார்த்த பலரும் லக்கி பாஸ்கர் படம் குறித்து பாசிட்டிவான விமர்சனங்களை கூறிய நிலையில், 150 தியேட்டர்களாக இருந்த எண்ணிக்கை தமிழ்நாட்டில் 220 தியேட்டர்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கூடுதலான திரைகளில் லக்கி பாஸ்கர் படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர். இதனால் ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் படங்கள் திரைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் மட்டுமே பெரும்பாலான தியேட்டர்களில் தற்போது திரையிடப்பட்டு வருகிறது. கடந்த 31ம் தேதி ரிலீஸாகி, 2 நாட்களில் உலகம் முழுவதும் லக்கி பாஸ்கர் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் தெளிவுள்ளது. இந்த தகவலை படத்தின் நாயகன் துல்கர் சல்மான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி லக்கி பாஸ்கர் படம் உலக அளவில் 2 நாட்களில் 26.2 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





