தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். ஆரம்பத்தில் துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் திருடா திருடி என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். பிறகு பிரம்மாண்ட வெற்றிக்காக காத்திருந்த தனுஷிற்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது பொல்லாதவன் திரைப்படம் தான். சொல்லப்போனால் அங்கிருந்துதான் அவரது திரைப்பயணம் உயரத்திற்கு சென்றது.
இதனை இயக்கிய வெற்றிமாறனுடன் நெருக்கமான பழக்கத்தில் இருந்த தனுஷ், அடுத்தடுத்து அவரது இயக்கத்தில் படம் நடிக்க ஆரம்பித்தார். வடசென்னை அசுரன் என இவர்களின் திரைப் பயணம் வெற்றிகரமாக தொடர்ந்தது. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் ஆடுகளம் படத்தைக் கூறலாம்.
மதுரை மண்ணை கதைக்களமாக கொண்டு சேவல் சண்டையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதற்காக வெற்றிமாறன் கடினமாக உழைத்து இருந்தது படத்தை பார்க்கும் போதே தெரிந்தது. அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சிகளுக்காகவும் மெனக்கெட்டு இருப்பார் வெற்றிமாறன்.
அடர்ந்த தாடியுடன், லுங்கி சட்டையை அணிந்து கொண்டு, மதுரை தமிழில் தனுஷ் பேசி அசத்தி இருப்பார். அது மட்டுமல்லாமல் சேவல் சண்டை குறித்தும் பல விஷயங்களை அறிந்து கொண்டு, முழுக்க முழுக்க ஒரு மதுரையின் இளைஞனாகவே வாழ்ந்திருப்பார் தனுஷ்.
குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சி மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதற்கு மற்றொரு காரணம் அதன் இசை தான். படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரைக்கும் அதனை உயிரோட்டமாக வைத்திருக்க ஜி வி பிரகாஷ் கடுமையாக உழைத்திருப்பார். இப்படி பல்வேறு அம்சங்கள் இருந்ததால் ஆடுகளம் திரைப்படம் தேசிய விருதை பெற்றது.
இந்த படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தது திரிஷா தான். திடீரென அவர் மாற்றப்பட்டு டாப்ஸி படத்திற்குள் வந்தார். இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். அதாவது திரிஷாவுக்கு அடுத்தடுத்த படப்பிடிப்புகள் இருந்ததால், ஆடுகளம் படத்திற்கு டேட் கொடுக்காமல் போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஒத்த சொல்லால பாடலையும் முதலில் வைக்கும் ஐடியாவே வெற்றிமாறனுக்கு இல்லை என்றும், படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு தான் அந்தப் பாடல் எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.





