தமிழ் சினிமா கண்டுபிடித்த தரமான இயக்குனர்களில் ஒருவர்தான் ஹெச் வினோத். தனது சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலமே தான் யார் என்பதை ஆணித்தரமாக அவர் நிரூபித்து விட்டார். இந்த இரண்டு திரைப்படங்களுக்காகவே ஹெச் வினோத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் இருக்கிறது.
ஆனால் இதற்குப் பிறகு அவர் அஜித்துடன் இணைந்து எடுத்த மூன்று திரைப்படங்களுமே அந்த அளவுக்கு பேசிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. பாலிவுட்டில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை என்னும் தலைப்பில் எடுத்தார் வினோத். ஆனால் இது கலவையான விமர்சனத்தையே பெற்றது.
பிறகு வினோத் அஜித் குமார் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க, அதனை பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்தது. மூன்றாவதாக இருவரும் இணைந்து துணிவு திரைப்படத்தை கொடுத்தார்கள். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பெரியளவு பேசப்படவில்லை என்றாலும் அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அது அமைந்தது.
இந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டார் வினோத். ஜனநாயகன் என இதற்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் சூழலில் அதற்கான படப்பிடிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கின்றன.
விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து இருப்பதால், வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இதன் படபிடிப்பு நடத்தப்படவில்லை. சென்னையை அடுத்த பையனூரிலேயே இதன் சூட்டிங் பணிகளை நடத்தி வருகிறார் வினோத். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ருதிஹாசனும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பரபரப்பான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகும் என்றும் பேசுகிறார்கள். இதற்குப் பிறகு, தனுஷை வைத்து திரைப்படத்தை இயக்க இருக்கிறார் வினோத். கொள்ளையை மையமாகக் கொண்டு திரில்லர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறதாம். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





