பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசன் உடன் இணைந்தார். இந்த திரைப்படத்திற்கு தக் லைப் என பெயர் வைக்கப்பட்டது. படத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் பலரைக் கவர்ந்திருந்தது.
இந்த திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. முதலில் இந்த திரைப்படத்தில் ரவி மோகன் துல்கர் சல்மான் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது.
ஆனால் கால் சீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அவர்கள் மூவரும் படத்தில் இருந்து விலகினார்கள். இதனைத் தொடர்ந்து புதிதாக, ப்ராஜெக்டிற்குள் வந்தார் சிலம்பரசன். இதேபோல் அசோக் செல்வன் படத்தில் இடம்பெற்று இருக்கிறார். இதுபோக த்ரிஷா நாசர் அபிராமி ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் படத்தில் நடித்துள்ளார்கள்.
வரும் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் சூழலில் தற்போது அதற்கான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் சிம்பு அமர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக வருகிறார். முன்னோட்டத்தில் பெரிய ட்விஸ்டாக த்ரிஷாவும் கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பது தெரியவந்துள்ளது.
தந்தைக்கு மகனுக்கும் இடையேயான மோதலை தான் இந்த திரைப்படம் கூறுகிறது. தலைமறைவு வாழ்க்கை வாழும் கமல்ஹாசனுக்கும், அவர் இடத்தை அடையத் துடிக்கும் சிம்புவுக்கும் தான் போட்டி என பலரும் சொல்கிறார்கள். இருப்பினும் இது செக்கச் சிவந்த வானம் கதையை போல் இருப்பதால் நிச்சயமாக அதில் இருந்து வேறுபாடு இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இப்படி இருக்க மணிரத்னத்தின் அடுத்த திரைப்படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அவர் இந்த முறை தெலுங்கில் இளம் நடிகர் நவீன் பாலி ஷெட்டியுடன் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.





