சினிமா தியேட்டர்களுக்கு பொழுதை போக்கிக் கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக வருகின்றனர். ஆனால் படம் மிகவும் மோசமாக அமைந்து விடுகிறது. ஆனால் 150 ரூபாய், 200 ரூபாய் கட்டணமாக கொடுத்துவிட்டோம் என்பதற்காக இரண்டரை மணி நேரம், மூன்று மணி நேரம் தியேட்டர் இருந்து படத்தை பார்த்துவிட்டு, ரசிகர்கள் பலரும் தலைவலியோடு வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு அவல நிலையை மாற்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனமான ஐநாக்ஸ் மற்றும் பிவிஆர் நிறுவனம் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. ஒரு ரசிகர் 50 சதவீத படத்தை மட்டுமே பார்த்தால் அவருக்கு 50 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும். 25 முதல் 50 சதவீத படம் மீது இருந்தால் 30 சதவீதம் டிக்கெட் தொகை திருப்பித் தரப்படும். 50 சதவீதத்துக்கு மேல் படம் இருந்தால் 60 சதவீதம் கட்டணம் திருப்பி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் ரெனால்ட் கூறியதாவது, டிக்கெட் ரிசர்வ் செய்பவர்கள் வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக 10 சதவீதம் கொடுத்து டிக்கெட்டை ரிசர்வ் செய்ய வேண்டும். ஏ ஐ கேமரா மூலம் தியேட்டரில் இருப்பவர் கண்காணிக்கப்படுவார்கள். ரசிகர்கள் புக் செய்யும் டிக்கெட் அவர்களின் இருக்கையுடன் இணைக்கப்படும்.
இதன் மூலம் யார் உள்ளே இருக்கிறார், ஒருவர் எப்போது உள்ளே வருகிறார் எப்போது வெளியே செல்கிறார் என்று அனைத்தையும் கண்காணிப்போம். ரசிகர்கள் எப்போதும் வெளியேறுகிறார்கள் என்பதை வைத்து அதற்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் கணக்கிடப்படும். அதன் பிறகு திருப்பிக் கொடுக்க வேண்டிய பணத்தை அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை 19 சதவீதமாக குறைந்துள்ளது, கொரோனா பரவல் காலகட்டத்திற்கு பிறகு மேலும் 25 சதவீதமாக குறைந்திருக்கிறது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு ஓடிடி தளங்கள் பெருகிவிட்டது.
இந் நிலையில், சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் மக்களுக்கு ஆர்வம் வெகுவாக குறைந்துவிட்டது. அதன் காரணமாக இந்த திட்டம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கொண்டு வரப்படுவதாக தெரியவந்துள்ளது. இதே திட்டத்தை மற்ற சாதாரண தியேட்டர்களிலும் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





