தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் அப்போதைய நடிகர்கள், ஹீரோக்கள் சில ஆயிரங்களில்தான் சம்பளம் வாங்கினார்கள். துணை நடிகர்கள், சின்ன சின்ன நடிகர்களின் சம்பளம் எல்லாம் சில நூறுகளில் தான் இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி கூட பல படங்களில் நடித்த பிறகுதான் ஒரு லட்சம் ரூபாய் என்ற சம்பளத்தையே பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1970 மற்றும் 80களில் இந்திய திரைப்படங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்ததால், நடிகர்களின் சம்பளமும் கணிசமாக உயர்ந்தது. அதன்படி அப்போது இந்திய சினிமாவில் உச்ச நடிகராக இருந்த அமிதாப் பச்சன் தனது சம்பளத்தை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தினார். அதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அமிதாப்பச்சன் இருந்தார்.
ஆனால் இந்த நிலை 1990களுக்குப் பிறகு நீடிக்கவில்லை. மற்ற முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1994ம் ஆண்டு முதல் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தங்களது சம்பளத்தை கணிசமாக உயர்த்தினர். ஒரு படத்தில் நடிக்க 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இணைந்தனர்.
ஆனால் கடந்த 1990 களிலேயே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 1 கோடி ரூபாய் சம்பளம் என்ற இலக்கை அடைந்து விட்டார். இவர் கடந்த 1992ம் ஆண்டு வெளியான ஆபத்பாந்தவுடு என்ற படத்திற்காக ரூ. 1.25 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். இதன் மூலம் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கிடைத்தது.
தொடர்ந்து 1994ம் ஆண்டுகளில் ரஜினி, கமல் ரூ. 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியபோது, சிரஞ்சீவி ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இப்போது சிரஞ்சீவிக்கு 69 வயது ஆகிறது. இப்போது விஸ்வம்பரா என்ற படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
விஸ்வம்பரா படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த, ஷங்கர் இயக்கிய கேம்சேஞ்சர் படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





