கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவர் கடந்த சில வருடங்களாகவே தேர்வு செய்யும் கதைகள் அட்டகாசமாக இருக்கின்றன. குறிப்பாக அவர் நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி சக்கைப்போடு போட்டன. கடைசியாக அவரது நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது.
பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான அந்தப் படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டாகி சூர்யா வெளியேறினார். சூழல் இப்படி இருக்க அவர் தனது 42ஆவது படமாக கங்குவா படத்தில் நடித்துவருகிறார். சிறுத்தை சிவா அந்தப் படத்தை இயக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார்.
சிவாவின் இயக்கத்தில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சூர்யாவை வைத்து கங்குவாவில் சம்பவம் செய்து விடுவாரோ என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் அவர்களின் சந்தேகத்தை அடித்து நொறுக்கியிருக்கிறது.
இந்தப் படமானது 3டி தொழில்நுட்பத்தில் மொத்தம் பத்து மொழிகளில் உருவாகிறது. இந்திய சினிமாவில் பத்து மொழிகளில் ஒரு படம் வெளியானது என்றால் அது கங்குவாதான். மேலும் சூர்யாவின் கரியரிலேயே உச்சக்கட்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பாகங்களாக படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் ஷூட்டிங் கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தற்போது படத்தின் க்ளைமேக்ஸை எடுத்து முடிப்பதற்காக படக்குழு தாய்லாந்தில் முகாமிட்டிருக்கிறது. பீரியட் காலம், தற்போதைய காலம் என மொத்தம் இரண்டு காலகட்டத்தில் கங்குவா உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி இந்தப் படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.





